வங்கியில் ரூ. 40 கோடி டெபாசிட் - கண்டுபிடித்த வருமான வரித்துறை..!!!

First Published Nov 29, 2016, 9:11 AM IST
Highlights


தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக டெல்லியில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் ரூ.40 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.

பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தபின், கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பெரும் பணக்காரர்களும், கருப்பு பணம் பதுக்குவோர்களும் பல வழிகளைக் கண்டுபிடித்து, வெள்ளையாக மாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு ‘செக்’ வைக்கும் வகையில், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்த கணக்கு வருமான வரித்துறையினர் மூலம் கண்காணிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதில் தலைநகர் டெல்லியில், சில தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அதிக அளவு செய்த டெபாசிட் செய்த பணத்தை வெள்ளையாக மாற்ற சில வங்கிகள் துணைபோவதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதன்படி டெல்லியில் உள்ள காஷ்மீரே கேட் பகுதியில் செயல்படும் ஆக்சிஸ் வங்கியில் 3 வங்கிக் கணக்குகளில் ரூ. 39.26 கோடி டெபாசிட் செய்யப்பட்டு, பணம் அங்கிருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இந்த பணம் லட்சுமி நகர் மற்றும் பழைய டெல்லி பகுதியில் இருக்கும் சில நகைக்கடை உரிமையாளர்கள் சிலரால் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.

பிரதமர் மோடி அறிவிப்புக்குபின், கடந்த 11 ந்தேதி முதல் 22ந் தேதிக்கு இடையில் இந்த பணம் புதிதாக தொடங்கப்பட்ட 3 வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டு, அந்த கணக்கில் இருந்து ஆர்.டி.ஜி.எஸ். மூலம் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு மற்றொரு கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அந்த வங்கியின் மேலாளர்களுக்கு ஏறக்குறைய ரூ.40 லட்சம் கமிஷன் வழங்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பணத்தை நகைக்கடை உரிமையாளர்களிடம் இருந்து, பெறுவதற்காக வங்கிநேரம் முடிந்தபின் சிறப்பு கவுன்ட்டர்களை மூலம் பணத்தை மேலாளர்கள் பெற்றுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வங்கி மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

click me!