மத்திய அரசின் 11 "கவர்ச்சி அறிவிப்புகள்” கண்துடைப்பா? மாதத்துக்கு எவ்வளவு தான் மிச்சமாகும்?

First Published Dec 9, 2016, 11:07 AM IST
Highlights


நாட்டு மக்களிடையே பணமில்லா பரிவர்த்தனையை அதிகப்படுத்தும் நோக்கில், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு பல சலுகைகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. 

அந்த அறிவிப்புகளை ஆராய்ந்தால், சாமானிய மக்களுக்கு எந்த விதத்திலும் பயனில்லாமல், கார்டுகள் பயன்படுத்துவோர்களுக்கு “கொசுறு காசு” தான் மிச்சமாகிறது. 

நாட்டில் புகழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடைசெய்து, கடந்த மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து வங்கிகள், ஏ.டி.எம்.களில் மக்கள் பணம் எடுக்க மத்திய அரசு பல கெடுபிடிகளை விதித்து வருகிறது. மக்களை டெபிட், கிரெட்டி கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகள் செய்ய வலியுறுத்தி வருகிறது. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புவெளியாகி நேற்றுடன் 30 நாட்கள் முடிந்தது. 

அந்த நாளையொட்டி, மத்தியநிதியமைச்சர் அருண்ஜெட்லி, மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிக மேற்கொள்ள 11 புதிய கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் எதுவுமே, சாமானியர்களுக்கு பயனும் இல்லை, கார்டுகளை பயன்படுத்துவோர்களுக்கு அதிகபட்ச சேமிப்பையும் தரவில்லை. 

பெட்ரோல்,டீசல்

பெட்ரோல், டீசல் போடும் போது பணம் செலுத்துவதற்கு பதிலாக கிரெட்டி, டெபிட் கார்டுகள், இ-வாலட்கள் மூலம் செலுத்தினால் 0.75 சதவீதம் தள்ளுபடி எனக்கூறப்பட்டது. உதாராணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலை பணமாகக் கொடுத்து போட்டால், அதற்கு ரூ.62. 99 காசுகள் கொடுக்க வேண்டும். கார்டுகள் மூலம், ரூ.62.47 காசுகள்தான். ஏறக்குறைய 52 காசுகள் வித்தியாசம். 

ஆயிரம் ரூபாய்க்கு நாம் கார்டு மூலம் பெட்ரோல் போடும், போது 15.87லிட்டர் கிடைக்கும். பணமாகக் கொடுத்து  போட்டால், 15.75 லிட்டர் கிடைக்கும். அதாவது வித்தியாசம் என்பது 0.120 மில்லிலிட்டர் மட்டுமே. இதேபோல, டீசலை பணமாகக் கொடுத்தால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.54.28 செலுத்த வேண்டும். கார்டு மூலம், ரூ.53.87 கொடுக்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கு பணம் கொடுத்து டீசல் போட்டால் நமக்கு 18.56 லிட்டர் கிடைக்கும், கார்டு மூலம் டீசல் போட்டால், 18.42 லிட்டர் கிடைக்கும். கூடுதலாக 0.140 மி.லிட்டர் மட்டுமே. 

நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் “பாஸ்ட் டாக்” என்ற பட்டையை வாங்கும் போது, அதில் 10சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று அரசு அறிவித்தது. இதன்படி, டெல்லி, யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில், இரு சக்கர வாகனத்துக்கு பணமாக  கட்டணம் செலுத்தினால் ரூ.175 கொடுக்க வேண்டும், கார்டுகள் மூலம் ரூ.157.50காசு தரவேண்டும். அதாவது ரூ17.50 காசுகள் மிச்சமாகிறது. கார் அல்லது ஜீப்களுக்கு பணமாக செலுத்தினால், ரூ.410 ம், கார்டுகள் மூலம் செலுத்தினால் ரூ. 369 செலுத்த வேண்டும். இதன் மூலம் ரூ.41 மிச்சப்படுத்தலாம்.

ரெயில்வே:-

ரெயில்வேயில் ஆன்-லைன்மூலம் முன்பதிவு செய்யும் போது, 10 லட்சம் விபத்துக்காப்பீடு இலவசம். அதேசமயம், ரெயிலில் சாப்பாடு, தங்குமிடம், ஓய்வு அறை முன்பதிவு செய்தால், 5 சதவீதம் தள்ளுபடி தரப்படும் எனத் அரசு தெரிவித்தது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு செல்ல வேண்டுமென கவுன்ட்டரில் டிக்கெட் முன்பதிவுக்கு ரூ.1,660 பணமாக கொடுக்க வேண்டும். அதுவே கார்டுகள் மூலம் முன்பதிவு செய்தால், ரூ.1,651.70 காசுகள் எடுத்துக்கொள்ளப்படும். ஏறக்குறைய 0.5 சதவீதம் தள்ளுபடியாக 9.30 காசுகள் கிடைக்கும். கூடுதலாக ரூ.10லட்சம் விபத்துக்காப்பீடு கிடைக்கும்.  ரெயிலில் செல்லும் போது பேன்ட்ரி காரில் உணவு ஆர்டர் செய்து, கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், 5 சதவீதம் தள்ளுபடி தரப்படும். 

 

காப்பீடு

புதிதாக ஜெனரல் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் எடுத்து கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், 10 சதவீதம் தள்ளுபடியும், பிரீமியம் தொகையை கார்டுகள் மூலம் செலுத்தினால் 8 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கிறது. உதாரணமாக ஒரு ரூ.2 லட்சம் காப்பீடு எடுத்து, 25 ஆண்டுகள் ப்ரியமியம் செலுத்துகிறார் என்றால், ஆண்டுக்கு 22 ஆயிரமும், மாதத்துக்கு ரூ.1980 மட்டுமே கார்டு மூலம் செலுத்தினால் போதுமானது.

click me!