ஆதார் சட்டம் ரத்து ஆகுமா?...அந்தரங்கம் அடிப்படை உரிமை தீர்ப்பு எதிரொலி…

First Published Aug 25, 2017, 10:43 PM IST
Highlights
aadar card act will be ban


அந்தரங்கம் அடிப்படை உரிமை என்ற தீர்ப்பைத் தொடர்ந்து, மத்திய அரசு இயற்றிய ஆதார் சட்டம் செல்லுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து முடிவு செய்யும்.

அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தனி மனிதரின் அந்தரங்கம் காக்கும் உரிமை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து முடிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட 9 நீதிபதிகள் அமர்வு, தனி நபர் அந்தரங்கம் காப்பது அரசியல் சட்டப்படி அடிப்படை உரிமை என்ற வரலாற்று சிறப்பு தீர்ப்பை நேற்று முன்தினம் வழங்கியது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மத்திய அரசு நிறைவேற்றிய ஆதார் சட்டம் செல்லுமா? என்பதை முடிவு செய்வதற்காக 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணை நடத்த உள்ளது.

தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வது என்பது நியாயமான ஒரு கட்டுப்பாடுதானா? அல்லது அந்தரங்கம் காக்கும் உரிமையை மீறுவதாக அமையுமா? என்பது குறித்து இந்த அமர்வு விசாரித்து முடிவு எடுக்க இருக்கிறது.

இந்த விசாரணையின்போது ஆதாருக்காக தனிநபர் அந்தரங்கம் காப்பதில் மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பது நியாயமற்றது என்ற முடிவுக்கு வந்தால், ஆதார் சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, ஆதார் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யலாம்.

இந்த வழக்கைத் தொடுத்து வாதாடிய கர்நாடகா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி மற்றும் மனுதாரர்கள், ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்படும் தகவல் விவரங்கள் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும், அந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்றும் வாதாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

click me!