சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், அவர் சொல்லி அனுப்பிய தகவலை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சிறையில் இருந்து அவ்வப்போது பொதுமக்களுக்கான செய்திகளையும் அவர் அனுப்பி வருகிறார். அந்த வகையில், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிறையில் இருந்தபடியே அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் முதல்வரிடம் சொல்லி அனுப்பியுள்ளார்.
undefined
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அதன்பிறகு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் சாசனத்தை காப்பாற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற செய்தியை அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லி அனுப்பியதாக தெரிவித்தார்.
“கெஜ்ரிவாலின் உடல்நிலை சீராக உள்ளதோடு, இன்சுலின் மருந்தையும் அவர் பெற்று வருகிறார். பஞ்சாபில் கோதுமை விளைச்சல் மற்றும் மாநிலத்தில் மின்சார விநியோகம் குறித்து அவர் என்னிடம் கேட்டறிந்தார். பஞ்சாப் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 158 மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றதைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். எனது சமீபத்திய குஜராத் பயணம் குறித்தும், ஆம் ஆத்மி கட்சிக்கு அம்மாநிலத்தில் இருக்கும் செல்வாக்கு பற்றியும் அவரிடம் கூறினேன். அரசியல் சட்டத்தை காப்பாற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற செய்தியை கெஜ்ரிவால் என்னிடம் சொல்லி அனுப்பினார். எங்கள் தலைவர்கள் அனைவரும் கட்சிக்காக பிரச்சாரம் செய்வார்கள்.” என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் தெரிவித்தார்.
இ-பாஸால் எந்த பலனும் கிடைக்காது: இத ட்ரை பண்ணுங்க - கே.சி.பழனிசாமி சொல்லும் யோசனை!
முன்னதாக, திகார் நிர்வாகம் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்க மறுத்துள்ளதாகவும், அவரை கொலை செய்ய சதி செய்வதாகவும் ஆம் ஆத்மி கட்சி அண்மையில் குற்றம் சாட்டியது. அதேபோல், தனது உடல்நிலை குறித்து திகார் சிறை நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிருப்தி தெரிவித்திருந்தார். தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதாலும், தினமும் இன்சுலின் கோரி வருவதாகவும் அவர் கூறியிருந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்சுலின் மருந்தை அவர் எடுத்து வருவதாகவும் பகவந்த் மன் தெரிவித்துள்ளார்.