சாமியார் குர்மீத் சிங் தீர்ப்பு எதிரொலி; பஞ்சாப், அரியானா துப்பாக்கி சூட்டில் 28 பேர் பலி… 250 பேர் காயம்; ஆயிரம் பேர் கைது

First Published Aug 25, 2017, 9:16 PM IST
Highlights
28 killed and 1000 persons arrested in panjab and hariyana


கடந்த 2002ம் ஆண்டு, பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று பஞ்ச்குலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது.

கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டவுடன், குர்மீத் ஆதரவாளர்கள் மிகப்பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர்.

பஸ், கார், போலீஸ் நிலையம், ரெயில்நிலையம் ஆகியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியானார்கள். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 ‘தேரா சச்சா சவுதா’ என்கிற சீக்கிய அமைப்பு பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக குர்மீத் ராம் ரஹிம் சிங் இருந்து வருகிறார். இந்த அமைப்பில் குர்மீத்துக்கு லட்சக்கணக்கானோர் சீடர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 1999ம் ஆண்டு பெண் சீடர்கள் 2 பேரை குர்மீத் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 1999-ல் புகார் எழுந்தது. இதையடுத்து பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 2002-ல் குர்மீத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன் பின் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு, பஞ்சக்குலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த 12 ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடந்த நிலையில், ஆகஸ்ட் 25-ந்தேதி தீர்ப்பு கூறப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

குர்மீத் சிங் மீது வழக்கு நடப்பதை அவரின் ஆதரவாளர்கள் விரும்பதாததால், தீர்ப்பு கூறப்படும் நாளன்று கடும் வன்முறையில் ஈடுபடுவார்கள் என போலீசாருக்கு உளவுத்துறை தகவல் சென்றது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆயிரம் துணை ராணுவத்தினர் இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட கடந்த 2 நாட்களாக அவர்கள் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

இதற்கிடையே தீர்ப்பு வழங்கப்படவுள்ள பஞ்ச்குலா நீதிமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசாரும், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். அதையும் மீறி குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் பூங்கா, சாலைகளில் குவிந்தனர்.

பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் குர்மீத் சிங்குக்கு ஆதரவாக கருத்துகள் பகிரப்பட்டதால், அவைகளும் முடக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர் மீத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தீர்ப்பு கூறப்படும் அன்று நீதிமன்றம் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்ததால், குர்மீத், பலத்த பாதுகாப்புடனும், தனது ஆதரவாளர்களுடன் ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா பகுதியில் இருந்து பஞ்ச்குலாவுக்கு காரில் வந்தார்.

நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி ஜெகதீப் சிங் நண்பகல் 2.30மணி அளவில் வழக்கின் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அதில் 2002ம் ஆண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் வழக்கில் சாமியார் குர்மீத் சிங் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். தண்டனை விவரங்கள் வரும் 28-ந்தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

இந்த வழக்கில் சாமியாருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு குறைவில்லாமலும், அல்லது ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று சி.பி.ஐ. வழக்கறிஞர் எச்.பி.எஸ். வர்மா தெரிவித்தார்.

இந்த தீர்ப்பைக் கேட்டதும் பஞ்ச்குலா சி.பி.ஐ. நீதிமன்றத்தின் வௌியே குவிந்து இருந்த சாமியார் குர்மீத்தின் ஆதரவாளர்கள், சீடர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். அவர்களை கட்டுப்படுத்தவும், கலைந்து செல்லவும் போலீசாரும், துணை ராணுவப்படையினர் ஈடுபட்டனர்.

ஆனால், குர்மீத் ஆதரவாளர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கியும், ஊடகத்தினரின் வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தியும், போலீஸ் நிலையத்தையும் சூறையாடியும் பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தண்ணீரை வேகமாக பீய்ச்்சி அடிக்கு வாகனத்தை பயன்படுத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இந்த கலவரத்தில் பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள், வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

நேரம் செல்ல கலவரம் பஞ்சாப், ஹரியானா, டெல்லி என பல பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 28 பேர் பலியானார்கள். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து பஞ்ச்குலா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பஞ்ச்குலா நகரில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, கலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலையை கேட்டறிந்தார்.

அதன்பின் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை நடத்தி, நிலையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். மேலும், அங்கு நடக்கும் சம்பவங்களை தீவிரமாக கண்காணிக்கவும், கலவரங்கள் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க தேவையான பணிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

 

click me!