நாடு முழுவதும் வெப்ப அலை தாக்கி வருகிறது. இந்த நிலையில் வரும் நாட்கள் மிகவும் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர் வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. இந்த நிலையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் வெப்ப அலைகள் கடுமையாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரமித் தேப்நாத் மற்றும் அவரது சகாக்களால் நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் குறிப்பாக, ஒட்டுமொத்த டெல்லியும் கடுமையான வெப்ப அலை தாக்கத்தின் அபாயத்தில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.. இந்த வெப்ப அலைகள் இந்தியாவின் முன்னேற்றத்தை, ஏற்கனவே கணித்ததை விட குறிப்பிடத்தக்க அளவில் தடுக்கின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 50 ஆண்டுகளில் 17,000 க்கும் அதிகமானோர் வெப்ப அலைகள் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. இந்தியாவின் காலநிலை பாதிப்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை கண்ட்றிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் வெப்பக் குறியீட்டை அதன் காலநிலை பாதிப்புக் குறியீட்டுடன் பகுப்பாய்வு மதிப்பீடு செய்தனர்.
கோடை காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடுவது நல்லதா?...விடை இதோ!
வெப்பக் குறியீடு என்பது வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, மனித உடல் எவ்வளவு வெப்பமாக உணர்கிறது என்பதற்கான அளவீடு ஆகும். காலநிலை பாதிப்புக் குறியீடு என்பது வெப்ப அலையின் தாக்கத்தை ஆய்வு செய்ய சமூகப் பொருளாதாரம், வாழ்வாதாரம் மற்றும் உயிர் இயற்பியல் காரணிகளைக் கணக்கிட பயன்படுத்தும் ஒரு கூட்டுக் குறியீடாகும். அரசின் தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வு தளத்திலிருந்து மாநில அளவிலான காலநிலை பாதிப்பு குறித்த கிடைக்கக்கூடிய தரவுத்தொகுப்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
அதன்படி, இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் கடும் வெப்ப அலை தாக்கங்களின் அபாயத்தில் இருப்பதாக புதிய ஆய்வு காட்டுகிறது.. மேலும் இந்தியா அதன் காலநிலை பாதிப்புகளை மறுமதிப்பீடு செய்வதை பரிசீலிக்க வேண்டும் என்று அந்த ஆய்வில் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர். வெப்ப அலைகளின் தாக்கத்தை உடனடியாக எதிர்கொள்ளத் தவறினால், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியா மெதுவாக முன்னேறக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே இந்த மாதம் வடமேற்கு மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர, ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான வெப்ப அலை நாட்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
வெயில்ல அசிடிட்டி நெஞ்சு எரிச்சல் வருவதை தவிர்க்கணும்னா இதை கண்டிப்பா சாப்பிடுங்க!
அதிகபட்ச வெப்பநிலை சமவெளிகளில் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், கடலோரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், மலைப்பாங்கான பகுதிகளில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் போது அது வெப்ப அலை என்று கருதப்படுகிறது.. மேலும் இயல்பிலிருந்து 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது வெப்ப அலையாக கருதப்படுகிறது.. இந்தியாவில், சுமார் 75 சதவீத தொழிலாளர்கள் (சுமார் 380 மில்லியன் மக்கள்) வெப்பம் தொடர்பான மன அழுத்தத்தை அனுபவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.