
நாம் சாப்பிடும் உணவுப் பழக்கம் என்பது நம் உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக அமைகிறது. அரிசி எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றை மூன்று மாதங்களுக்கு முற்றிலுமாக தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? மருத்துவர்கள் இது குறித்து என்ன கூறுகிறார்கள்? உணவு மாற்றத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் சவால்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அரிசியால் செய்யப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள், சர்க்கரை ஆகியவை அதிக கலோரி கொண்ட உணவுகளாகும். குறிப்பாக வெள்ளை அரிசி அதிக கார்போஹைட்ரேட் கொண்டது. எண்ணெயில் அதிக கொழுப்புகள் உள்ளது. சர்க்கரை உடலில் விரைவாக கலோரிகளை சேர்க்கிறது. இந்த மூன்றையும் நம் உணவு முறையில் இருந்து தவிர்த்தால் உடலில் கலோரி உட்கொள்ளல் குறையும். இது எடை இழப்புக்கு வழிவகுக்கும். மருத்துவர்கள் கூற்றுப்படி இந்த உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும். உடல் பருமன் உள்ளவர்கள் எடையில் 5 முதல் 10% வரை குறைக்கலாம். இது உடற்பயிற்சி மற்றும் ஒட்டுமொத்த உணவு முறையை பொறுத்தது. எடை இழப்பு என்பது ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். முற்றிலும் அரிசி, எண்ணெய், சர்க்கரையை தவிர்ப்பது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுத்தலாம். எனவே மருத்துவ ஆலோசனையுடன் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை மற்றும் அரிசி ஆகியவை ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும். இவற்றை தவிர்ப்பது குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவர்களின் கருத்துக்கள் படி சர்க்கரை முற்றிலுமாக நீக்குவது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும். வெள்ளை அரிசிக்குப் பதிலாக முழு தானியங்கள் அல்லது குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகளை உட்கொள்வது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறையாமல் பார்த்துக் கொள்வதற்கு மருத்துவரின் வழிகாட்டுதலுடன் உணவு மாற்றங்களை செய்ய வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோய்க்கு மருந்து எடுப்பவர்கள் உணவு முறை மாற்றத்திற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற வேண்டியது அவசியம்
எண்ணெய் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். பதப்படுத்தப்பட்ட எண்ணெய்கள் மற்றும் சர்க்கரை உட்கொள்ளலை குறைப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக திரவ நிலையில் உள்ள எண்ணெய்களான பாமாயில் மற்றும் டிரான்ஸ் ஃபேட் உணவுகளை தவிர்ப்பது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். மேலும் சர்க்கரையை தவிர்ப்பது உடலில் அலர்ஜியை குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும். ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ள ஆலிவ் எண்ணெய், அவகேடா மற்றும் நட்ஸ்கள் போன்றவற்றை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். அரிசி உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் செரிமான பிரச்சனைகளையும் ஆற்றல் குறைவையும் ஏற்படுத்தலாம். எனவே இவற்றை தவிர்ப்பதன் மூலம் செரிமான அமைப்பு மேம்படுவதோடு உடலுக்கு நிலையான ஆற்றலும் கிடைக்கும்.
சர்க்கரை மற்றும் பதப்படுத்த உணவுகள் மனநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம். இவற்றை தவிர்ப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சர்க்கரையை தவிர்ப்பது மூளையில் டோபோமைன் அளவை சீராக்க உதவும். இது மன அழுத்தத்தை குறைக்கும். ஆரோக்கியமான உணவு முறை மனநிலையை மேம்படுத்தும். மனநிலை மேம்பாட்டிற்கு வைட்டமின் பி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உணவுகளை சேர்ப்பது நல்லது. அரிசி, எண்ணெய் மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்ப்பதன் மூலம் எடை இழப்பது, சர்க்கரை நோய் கட்டுக்குள் வருவது, கொழுப்பு கட்டுக்குள் வருவது, கல்லீரலில் சேரும் கொழுப்புகள் குறைவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக மேக்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவத் தலைவர் டாக்டர் மீனாட்சி ஜெயின கூறியிருக்கிறார். உடலில் கூடுதல் சர்க்கரை மற்றும் கெட்ட கொழுப்புகள் இல்லாததால் உடற்பயிற்சி செய்யும் திறன் மற்றும் நுரையீரல் செயல்பாடு மேம்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரிசி, எண்ணெய் மற்றும் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்ப்பது அனைவருக்கும் பொருந்தாது. குறிப்பாக மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் நாள்பட்ட நோய் உள்ளவர்களுக்கு இந்த முறை பொருந்தாது. இந்த உணவுகளை தவிர்க்கும் பொழுது உடலுக்கு தேவையான மற்ற ஊட்டச்சத்துக்கான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றை மற்ற உணவுகளில் இருந்து பெற வேண்டியது அவசியம். இவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது கடினமாக இருக்கலாம். எனவே இவற்றை படிப்படியாக குறைத்து ஆரோக்கியமான உணவுகளை சேர்ப்பது நல்லது. உணவு மாற்றத்துடன் உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மூன்று மாதங்களுக்கு அரிசி, எண்ணெய் மற்றும் சர்க்கரையை தவிர்ப்பது உடல் எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரை கட்டுப்பாடு செரிமான மேம்பாடு போன்ற பல நன்மைகளை வழங்கலாம். இருப்பினும் இந்த மாற்றத்தை ஆரோக்கியமான முறையில் செய்ய மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். சமநிலையான உணவு முறையுடன் இந்த மாற்றங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.