
முகத்தில் முகப்பருக்கள் வருவதை யாருமே விரும்புவது இல்லை. ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ யாராக இருந்தாலும் தனக்கு பரு வரும்போது அதனை கிள்ளி விடுவதை பழக்கமாக வைத்திருப்போர் ஏராளம். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் முகப்பருவை கிள்ளியதலா மரணத்தின் வாசலுக்கு செல்லவே வாய்ப்பு ஏற்பட்ட சம்பம் கொஞ்சம் கதி கலங்க வைத்துள்ளது. இந்தப் பதிவில் முகப்பருவை கிள்ளுதல் எப்படி இறப்புக்கு வாய்ப்பு அளிக்கும் என காணலாம்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்த டிக்டாக் பிரபலம் லிஷ் மேரி. இவரின் அழகான முகத்தில் நீர்க்கட்டி மாதிரி ஒரு பரு வந்துள்ளது. மூக்கு கீழ், வாய்க்கு அருகே இருந்த அந்த முகப்பருவை வழக்கம் போல கிள்ளி எறிந்துள்ளார். இதன் பின்னர் அவருடைய முகம், உதடு ஆகியவை வீங்கி கோரமாக மாறிவிட்டாராம். சிரிப்பதற்கு கூட சங்கடப்பட்டுள்ளார்.
முகப்பருவுக்கு சிகிச்சை
முகப்பருவை கிள்ளியதால் ஏற்பட்ட வலி தாங்கமுடியாமல் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் அடிப்படையில் 3 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் லிஷ் மேரி. புறாவுக்கு போரா? என்பது போல முகப்பருவுக்கு ஏன் மூன்று நாள் சிகிச்சை ? என தோன்றுகிறதா? இதைக் குறித்து சிகிச்சை அளித்த டாக்டர் அளித்த தகவலை காணலாம்.
மரணத்தின் முக்கோணம்:
நியூயார்க்கை சேர்ந்த தோல் மருத்துவர் மார்க் ஸ்ட்ரோம் லிஷ்மேரிக்கு வந்த முகப்பரு குறித்து பகிர்ந்த தகவலில், அவருக்கு தோன்றிய முகப்பரு ‛மரணத்தின் முக்கோணம்' என குறிப்பிட்டுள்ளார். நம் முகத்தில் மூக்கு , வாய், கேவர்னஸ் சைனஸ் ஆகியவை வழியாக மூளையுடன் நேரடியாக இணையும் நரம்புகள் இருக்கும் இடத்தை தான் மரணத்தின் முக்கோணம் என்கிறார்கள். இங்கு தான் லிஷ்மேரிக்கு பரு வந்துள்ளது. அதனை அவர் கிள்ளியதால் முகம் வீங்கியிருக்கிறது. இந்த இடத்தில் எளிதில் பாக்டீரியா தொற்று வரக் கூடும். வேகமாக பரவும் வாய்ப்பும் உள்ளது.
குறிப்பாக இங்கு தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியா இரத்த ஓட்டத்தில் கலந்து மூளைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக கண்பார்வை இழப்பு, பக்கவாதம் ஆகியவை வரக் கூடும். சில நேரங்களில் மரணமும் ஏற்படலாம். லிஷ் மேரிக்கு பாக்டீரியா தொற்று கண்டறியப்பட்டாலும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் குணமாகிவிட்டார்.