
சீன விஞ்ஞானிகள் எப்போதும் வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனவர்கள். இப்போது எலும்பு முறிவுகளை சரிசெய்யும் பசையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளானர். அதுவும் வெறும் மூன்றே நிமிடங்களில் முறிந்த எலும்புகளை சரிசெய்யும் திறன் கொண்ட, Bone-02 என்ற மருத்துவ பசையை அறிமுகப்படுத்தியுள்ளனர். எலும்பியல் அறுவை சிகிச்சை செய்து வாரக்கணக்கில் எலும்புகள் இணைய இனி காத்திருக்க வேண்டியதில்லை.
இந்த மருத்துவ பசையை ஜெஜியாங் மாகாணத்தில் இருக்கும் சர் ரன் ரன் ஷா மருத்துவமனை டாக்டர் லின் சியான்ஃபெங் தலைமையில் உள்ள குழு உருவாக்கியது. இந்த பசையானது ஈரமான, நகரும் மேற்பரப்பில் வலுவாக ஒட்டிக்கொள்ளும் சிப்பிகளின் ஒருவகை திறனால் உருவாக்கப்பட்டது. ஸ்டீல் பிளேட்டுகளை போல அல்லாமல், இந்த பசை எலும்புகள் குணமடையும்போது படிப்படியாகக் கரைந்துவிடுகிறது. பிளேட்டுகளை நீக்க மீண்டும் அறுவை சிகிச்சை செய்வது போல இதில் செய்ய வேண்டியதில்லை. இந்த மருத்துவ பசையை 150க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் சோதித்த பின்னரும் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. இரத்தம் நிறைந்த பகுதிகளில் கூட பாதுகாப்பான உறுதியான பிணைப்பை இந்தப் பசை ஏற்படுத்துகிறது.
எலும்பு -02 (Bone-02) என்ற இந்த பசை அறுவை சிகிச்சையின் நேரத்தை குறைக்கிறது. தொற்று அபாயங்களின்றி விரைவில் குணமடைய உதவும் என நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த கண்டுபிடிப்பு உலகளவில் எலும்பு முறிவு சிகிச்சையில் பெரிய மைல்கல்லாகும்.
இந்த பசை பயோமிமிக்ரி அடிப்படையில் உருவானது. அதாவது சிப்பிகள் எப்படி நீருக்கடியில் மேற்பரப்புகளின் மீது வலுவாக ஒட்டிக்கொண்டு, கடல் நீரோட்டங்களை எதிர்கொள்கிறதோ அப்படி தான் இந்தப் பசை இரத்தவோட்டத்தில் செயல்படுகிறது. இந்த பசையை வைத்த 2 முதல் 3 நிமிடங்களுக்குள் உடைந்த எலும்புகளை பிணைத்து பாதுகாக்கிறது. இதன் விரிவான செயல்படும் திறன் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளது. இது நோயாளியை மென்மையான முறையில் குணப்படுத்த உதவுகிறது. எஃகு தகடுகள், திருகுகள் வைப்பதற்கு பதிலாக அறுவை சிகிச்சைகள் மூலம் குறுகிய நேரத்தில் சிகிச்சையை முடிக்கலாம் என சீன மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பசை உயிரியல் ரீதியாக உறிஞ்சக்கூடிய வடிவமைப்பு கொண்டது. ஆகவே ஆறு மாதங்களுக்குள்ளாகவே கரைந்து எலும்புகள் மீண்டும் உறுதியாகும் போது மறைந்து விடுகின்றன. இந்த பசையை பயன்படுத்துவதால் எலும்புகள் குணமாக மற்ற எலும்பு முறிவு சிகிச்சை போல நீண்ட காலம் வைத்துக் கொள்ளாது. உலோகம் வைத்து செய்யப்படும் சிகிச்சை முறையில் அடுத்தடுத்து பாதிப்புக்கு ஏற்றவாறு அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டி இருக்கும். இந்த பசையை பயன்படுத்தினால் அப்படி செய்யத் தேவையில்லை. சீன விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுக்க உள்ள மருத்துவத்துறையில் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என சொல்லப்படுகிறது.