
சிறுநீரகம் என்பது நம் உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதுதான் நம் உடலில் சேரும் கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றும். இரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையையும் இது செய்யும். இதனால்தான் சிறுநீரகம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சிறுநீரகம் நன்றாக செயல்பட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் சரியாக தண்ணீர் குடிக்காவிட்டால் நீரிழப்பு, சிறுநீர் கற்கள், சிறுநீர் தொற்று, சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஆனால் ஏற்கனவே சிறுநீர் பாதிப்பு உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படி குடித்தால் என்ன ஆகும்? எனவே, இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் ஏன் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது?
உடல் செயல்பாட்டிற்கு தண்ணீர் குடிப்பது நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாக குடித்தால், அதிகப்படியான நீர்ரேற்றத்தின் காரணமாக உடலில் தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்ற கரைசல்கள் நீருடன் இணைந்து நீர்த்துப் போகும். சிறுநீரகம் பொட்டாசியம், உப்பு, மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை நிர்வகித்தாலும் இவற்றில் ஒன்று அதிகமானாலும் அல்லது குறைந்தாலும் அது சிறுநீரகத்திற்கு ஆபத்தை தான் விளைவிக்கும். அதுவும் நாள்பட்ட சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இது பெரிய பிரச்சினையாகிடும். இதனால்தான் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று சொல்லப்படுகிறது.
அப்படி சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக தண்ணீர் குடித்தால் பொதுவான சில அறிகுறிகளை ஏற்படுத்தும். அவை குமட்டல், வாந்தி, தலைவலி, சோர்வு, தசைப்பிடிப்பு,தசை பலவீனம், எரிச்சல், குழப்பமான மனநிலை, ஓய்வின்மை உணர்வு, வலிப்பு தாக்கங்கள் ஆகியவை ஆகும்.
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
சிறுநீரக நோயாளிகள் தண்ணீர் மட்டுமல்ல பிற பானங்களையும் குறைந்த அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மீறும் போது உடலில் திரவ சுமை அதிகரிக்கும். மேலும் அதை வெளியேற்ற முடியாமல் போகும். அது மட்டுமல்லாமல் வீக்கம், உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பு, நுரையீரலில் திரவம் கோர்ப்பது, இதய செயலிழப்பு, எலக்ட்ரால் லைட்டுக்களில் ஏற்ற தாழ்வுகள் போன்ற ஆபத்துகள் ஏற்படும். சில சமயங்களில் தீவிர சிகிச்சை கூட தேவைப்படும்.
சிறுநீர் பிரச்சனை இருப்பவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர் அவரது சிறுநீரக செயல்பாடு மற்றும் உடல்நிலை பொறுத்து தண்ணீர் அருந்தும் அளவு மாறுபடும். எனவே மருத்துவர் அணுகி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது தான் நல்லது. மேலும் மருத்துவர் கூறும் அளவை தாண்டி தண்ணீர் குடித்தால் அது ஆபத்தானது மற்றும் அவர்களின் நிலையையும் மோசமாக்கிவிடும்.