இன்று நாம் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா வைத்து ஒரு சூப்பரான சமோசாவை செய்ய உள்ளோம்.
பொதுவாக மாலை நேரங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் ஸ்னாக்ஸ் வகைகளில் சமோசாவும் ஒன்றாகும். சமோசாவில் ஆனியன் சமோசா, ஆலூ சமோசா, வெஜ் சமோசா,கார்ன் சமோசா என்று பல விதங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதற்கென ஒரு சுவையை தரும். இன்று நாம் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா வைத்து ஒரு சூப்பரான சமோசாவை செய்ய உள்ளோம்.
இந்த மட்டன் கீமா சமோசாவை வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டார்கள். அருமையான ருசியில் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனை ஒரு முறை செய்து பாருங்கள், பின் இதனையே அடிக்கடி செய்து தரும் படி கேட்பார்கள் வீட்டில் உள்ளவர்கள். வாங்க! சுவையான மட்டன் கீமா சமோசாவை சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் 1/4 கிலோ
சமோசா பட்டி-7 தாள்
வெங்காயம்- 3
பச்சை மிளகாய்-2 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1/4 ஸ்பூன்
தனியா தூள்-1/2 ஸ்பூன்
மஞ்சள்-1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
"இட்லி மஞ்சூரியன் " இதனை வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்
செய்முறை:
முதலில் மட்டனை அலசி பின் மிக பொடியாக துண்டுகளாக வெட்டி பின் கொத்திவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் .வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு அகலமான கடாய் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து வதக்கிய பின்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தனியா தூள்,மிளகாய் தூள், கரம்மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தின் மசாலா வாசனை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்..
அடுத்து அரிந்து வைத்துள்ள மட்டன் கீமா சேர்த்து ,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் வரை ,அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு, வேக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றி கீமா நன்றாக வெந்து வாசனை வரும் போது அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். இப்போது சமோசா கலவை ரெடி!
சமோசா பட்டி ஒன்று எடுத்து அதனை கோன் வடிவில் சுருட்டி, சமோசா கலவையை கொஞ்சம் எடுத்து இதில் நிரப்பி மூடி விட வேண்டும். இதே மாதிரி அனைத்து தாளினையும் செய்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு அகலமான கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கொதித்த உடன், ஒவ்வொரு சமோசாவாக போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறு மொருவான மட்டன் கீமா சமோசா ரெடி!! இதற்கு சாஸ் வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.