Chicken Shawarma Roll : வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான சிக்கன் ஷவர்மா ரோல்!

By Dinesh TG  |  First Published Nov 5, 2022, 9:09 PM IST

சுவையான சிக்கன் ஷவர்மா எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


இன்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஷவர்மா உணவானது அநேக இடங்களில் கிடைக்கிறது. இந்த ரெசிபி இளம் தலைமுறையினர் , குறிப்பாக உணவு பிரியர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற ஒரு ரெசிபி ஆகும். இதனை மாலை நேர சிற்றுண்டியாக ஒரு முறை செய்து பாருங்கள், இதனையே அடிக்கடி செய்து தருமாறு குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை ஆபரமாக இருக்கும். 

ஷவர்மாவில் வெஜிடபிள் ஷவர்மா, சிக்கன் ஷவர்மா, பீஃப் ஷவர்மா, போர்க் ஷவர்மா என்று பல வகைகள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் சுவையான சிக்கன் ஷவர்மா எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Latest Videos

undefined

தேவையான பொருட்கள்:

போன் லெஸ் சிக்கன் - 1/2 கிலோ 
வெங்காயம் - 1
மைதா - 1 கப்
முட்டைகோஸ் - 1/4 கப் 
முட்டை பாலேடு - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2ஸ்பூன்
எலுமிச்சைசாறு - 1 ஸ்பூன்
கெட்டி தயிர் - 2 ஸ்பூன்
சர்க்கரை -1/4ஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு 
உப்பு- தேவையான அளவு 

சூப்பரான சுவையில் "கொங்குநாடு சிக்கன் சிந்தாமணி" இப்படி செய்து பாருங்க!

செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, அலசிக் கொள்ள வேண்டும். பின் வெங்காய்த்தை மிக பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். ஒரு விலாசமான பாத்திரத்தில் சர்க்கரை, மைதா, தயிர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து ,சிறிது தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போன்று பிசைந்து கொள்ள வேண்டும். பின் மாவினை ஒரு ஈரத்துணி போட்டு மூடி வைத்து சுமார் 1 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளுடன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,எலுமிச்சை சாறு,மிளகாய் தூள்,சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஊற வைத்த மாவினை ,உருண்டையாக எடுத்து , சப்பாத்திக் கல்லில் வட்டமாக தேய்த்து, அடுப்பில் தோசைக்கல் வைத்து,. தோசைக்கல் சூடான பின் சப்பாத்திகளாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் கடாய் ஒன்று வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், சிக்கன் கலவையை சேர்த்து சிக்கன் நன்கு வேகும் வரை பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் நன்றாக வெந்த பிறகு, அடுப்பினை ஆஃப் செய்து விட்டு பாத்திரத்தை கீழே இறக்கி கொண்டு, ஆறிய பின் சிக்கனை சிறிய சிறிய துண்டுகளாக பிய்த்துக் கொண்டு, சுட்டு வைத்துள்ள மைதா சப்பாத்திகள் மீது முட்டை பாலேடு தடவி மையத்தில் சிக்கன் கலவையை வைத்து பரப்பி, அதன் மீது முட்டைக்கோஸ், வெங்காயம் தூவி ரோல் செய்தால் , சுவையான சிக்கன் ஷவர்மா ரோல் ரெடி!
 

click me!