
ருசியான மற்றும் காரமான செட்டிநாடு உருளை வறுவல் அல்லது உருளைக்கிழங்கு பொரியல், செட்டிநாடு சமையல் குறிப்புகளில் காணப்படும் முக்கியமான உணவு ஆகும். இதை தயாரிப்பதும் எளிது. காலை அவசரமான நேரத்தில் விரைவாக செய்யவும் இந்த சைட் டிஷ்ஷை செய்து விடலாம். செட்டிநாட்டில் தனித்துவமான முறையில், கடைகளில் விற்கும் மசாலா பொடிகளை சேர்க்காமல், அப்போது அரைத்த மசாலாக்களை பயன்படுத்தி செய்வதால் இதன் சுவையே தனியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு (வேகவைத்து உரிக்கப்பட்டது) - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (தலா 2-3 துண்டுகளாக வெட்டவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்தமல்லி இலைகள் - அழகுபடுத்த
பைசா செலவு இல்லாமல் பளபளக்கும் முகத்தை பெற சூப்பரான வழி
செட்டிநாடு மசாலா தயாரிக்க தேவையான பொருட்கள் :
காய்ந்த சிவப்பு மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
- ஒரு கடாயை சூடாக்கி அதில் அனைத்து செட்டிநாடு மசாலா பொருட்களையும் சேர்க்கவும். வறுத்து, அந்த பொருட்களை நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும்.
- புதிதாக அரைத்த மசாலா, மஞ்சள்தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்க்கவும்.
- இப்போது வேகவைத்து தோலுரித்த நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வறுக்கவும். மசாலாக்கள் அனைத்தும் உருளைக்கிழங்குடன் சேர்ந்து நன்று வறுபட்டதும், கொத்தமல்லி இலைகளால் தூவி இறக்கவும். இதை சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.
உருளைக்கிழங்கு வறுவல் என்றாலே குழந்தைகளுக்கு பிரியமானது தான். இதில் சேர்க்கப்பட்டுள்ள மசாலா பொருட்கள், உருளை கிழங்கால் வாயு தொந்தரவு ஏதும் வராமல் தடுக்கும். அவசரத்திற்கு குழந்தைகளுக்கு லன்ச் பாக்சிற்கு செய்து கொடுத்து விடலாம். தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிடுவது ஏற்ற ஒரு சைட் டிஷ் ஆகும்.