
ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சி அத்தியாவசியம். ஜிம்முக்குச் சென்று கடினமான பயிற்சிகளைச் செய்ய முடியவில்லை என்றாலும், வீட்டிலேயே அல்லது வெளியிலேயே 30 நிமிடங்கள் எளிதாகச் செய்யக்கூடிய ஏதேனும் பயிற்சிகளை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.
நடைப்பயிற்சி :
நடைப்பயிற்சி என்பது மிகவும் எளிமையான, ஆனால் மிகவும் பயனுள்ள உடற்பயிற்சியாகும். இதற்கு எந்த உபகரணங்களும் தேவையில்லை, எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆரம்பத்தில் தினமும் 20-30 நிமிடங்கள் மிதமான வேகத்தில் நடங்கள். பின்னர் தூரத்தையும், நேரத்தையும் அதிகரிக்கலாம். வழக்கமான நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. கலோரிகளை எரித்து உடல் எடையை சீராகப் பராமரிக்க உதவுகிறது. மேலும், மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்துகிறது. பூங்கா போன்ற பசுமையான இடங்களில் நடப்பது மனதிற்கு இதமாக இருக்கும்.
எடை தூக்குதல் :
"எடை தூக்குதல் ஆண்களுக்கானது" என்ற பொதுவான கருத்து பல பெண்களிடம் உள்ளது. ஆனால், பெரும்பாலான பெண்கள் எடை தூக்குதலைத் தவிர்க்கிறார்கள், தங்கள் தசைகள் பெரியதாகிவிடும் என்று பயப்படுகிறார்கள். ஆனால், பெண்களின் உடலில் ஆண்களைப் போல டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) ஹார்மோன் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு தசைகள் பெரியதாக வளரும் வாய்ப்பு மிகக் குறைவு. எடை தூக்குதலால் தசைகள் வலுப்பெற்று உடல் வனப்பு மேம்படும். மேலும், எலும்புகள் அடர்த்தியை பெறுகிறது, இது பெண்களுக்கு மெனோபாஸ் (Menopause) காலத்திற்குப் பிறகு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. எடை தூக்குதல் பயிற்சிக்கு அதற்கென உள்ள பயிற்சியாளரின் (Trainer) உதவியுடன் சரியான நுட்பத்தைக் கற்றுக்கொள்வது காயம் ஏற்படுவதைத் தடுக்கும். வாரத்திற்கு 2-3 முறை எடை தூக்கும் பயிற்சிகளைச் செய்யலாம்.
யோகா மற்றும் பைலேட்ஸ் :
யோகா மற்றும் பைலேட்ஸ் ஆகியவை உடல் நெகிழ்வுத்தன்மை, பலம் மற்றும் மன அமைதிக்கு மிகவும் பயனுள்ள பயிற்சிகள். இப்பயிற்சி முதுகுவலி குறைப்புக்கு உதவுகிறது. மேலும், ஆழ்ந்த சுவாசம் மற்றும் தியானப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதியை அளிக்கிறது.
வீட்டு வேலைகளும் உடற்பயிற்சியே:
வீட்டில் செய்யும் வேலைகளும் ஒருவிதமான உடற்பயிற்சியே, தரையைத் துடைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, தோட்ட வேலைகள் செய்வது போன்றவையும் உடலுக்கு அசைவைக் கொடுக்கின்றன. இவற்றை உடற்பயிற்சியாகவே கருதி முழு ஈடுபாட்டுடன் செய்யலாம்.
முக்கிய குறிப்புகள்:
உடற்பயிற்சி செய்யும்போதும், நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
உடற்பயிற்சியுடன் சத்தான உணவையும் உட்கொள்ள வேண்டும்.
எந்தப் பயிற்சியாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து செய்வதுதான் முக்கியம்.
உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.