
முகம் அழகாக இருக்க யாருதான் விரும்ப மாட்டார்கள் இதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்துபவர்கள் நம்மில் பலர். ஆனால் சருமத்தைப் பாதுகாக்க சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த க்ரீம்கள் மற்றும் சீரம்களை வாங்கிப் பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லையா? காரணம், பொருட்களின் தரம் போலவே, அவற்றைப் பயன்படுத்தும் வரிசையும் முக்கியமானது. ஆம், எந்தப் பொருளை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தெளிவான புரிதல் இல்லையென்றால், அதன் நன்மையை விட தீமையே அதிகமாகும். சருமப் பராமரிப்பிற்காகப் பின்பற்ற வேண்டிய சரியான வரிசை இதோ:
காலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி, சருமப் பராமரிப்பின் முதல் படி முகத்தைக் கழுவுவதுதான். சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை நீக்கினால்தான் மற்ற பொருட்கள் உள்ளே ஊடுருவும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும்.
முகம் கழுவிய பிறகு சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்த டோனர் பயன்படுத்தப்படுகிறது. உள்ளங்கையிலோ அல்லது காட்டன் பேடிலோ சிறிதளவு டோனரை எடுத்து முகத்தில் மெதுவாகத் தட்டிக் கொடுக்கலாம். இது துளைகளைச் சுத்தம் செய்ய உதவும்.
வைட்டமின் சி, ஹைலூரோனிக் அமிலம் போன்ற சீரம்களைப் பயன்படுத்துபவர்கள் டோனருக்குப் பிறகு அதைப் பயன்படுத்த வேண்டும். சருமப் பிரச்சனைகளைச் சரிசெய்ய அதிகம் உதவுவது சீரம்கள்தான். இவை சருமத்தில் உறிஞ்சப்படுவதற்கு சிறிது நேரம் கொடுக்கவும்.
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது. எனவே, மாய்ஸ்சரைசருக்கு முன்பு ஐ க்ரீம் பயன்படுத்துவது நல்லது. கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையம் மற்றும் சுருக்கங்களை நீக்க இது உதவும்.
எந்த வகை சருமத்தினரும் தவிர்க்கக் கூடாத ஒன்று மாய்ஸ்சரைசர். நாம் முன்பு பயன்படுத்திய சீரம்களை சருமத்திற்குள் 'லாக்' செய்ய இது உதவுகிறது. இதன் மூலம் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும்.
பகல் நேரத்தில் சருமப் பராமரிப்பு செய்தால், கடைசிப் படியாக சன்ஸ்கிரீன் இருக்க வேண்டும். வெயிலில் சென்றாலும் இல்லாவிட்டாலும், வீட்டிற்குள் இருந்தாலும் சன்ஸ்கிரீன் கட்டாயம். இது சருமத்தை புற ஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. இரவில் சன்ஸ்கிரீனுக்குப் பதிலாக ஃபேஸ் ஆயில்கள் அல்லது நைட் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.