7,700mAh பிரம்மாண்ட பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டது; இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் 8.3 மிமீ மெலிதான வடிவமைப்பில் கிடைக்கிறது. பின்பக்கத்தில் 108MP கேமரா, முன்பக்கத்தில் 5MP செல்ஃபி கேமரா, AI Button அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்மார்ட்போன் கீழே விழுந்துவிடுமோ என்ற பயம், நாள் முழுக்க சார்ஜரை தேடி அலையும் டென்ஷன்... 2 கவலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புத்தம் புதிய போன் ஒன்று சந்தையில் தடாலடியாக நுழைந்துள்ளது. ஹானர் நிறுவனம் தனது X சீரிஸில், அதீத பேட்டரி ஆயுளையும் கல்லுளிமங்கன் போன்ற வலிமையையும் மையமாகக் கொண்டு Honor X8e என்ற ஸ்மார்ட்போனை எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக அறிமுகப்படுத்தி உள்ளது.
25
7,700mAh பேட்டரி, 108MP மெகா கேமரா & ஏ.ஐ மேஜிக்
இன்றைய நடுத்தர ஸ்மார்ட்போன்களில் 5,000mAh பேட்டரி இருப்பதே பெரிய விஷயம். ஆனால் ஹானர் இதில் 7,700mAh என்ற பிரம்மாண்ட பேட்டரியைத் திணித்துள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் பல மணி நேரங்கள் கவலையின்றிப் பயன்படுத்தலாம். இவ்வளவு பெரிய பேட்டரியை வேகமாக நிரப்ப ஏதுவாக 45W Honor SuperCharge ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் உள்ளது. இத்தனை பெரிய பேட்டரி இருந்தும் இதன் தடிமன் 8.3 மிமீ மட்டுமே; எடை 218.5 கிராம்.
புகைப்படப் பிரியர்களுக்காக இதன் பின்புறத்தில் f/1.75 அப்பேர்ட்ச்சர் கொண்ட 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் துணை லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது 1080p வீடியோ பதிவு மற்றும் 8x டிஜிட்டல் ஜூம் வசதியை ஆதரிக்கிறது. முன்பக்கத்தில் வீடியோ கால்ஸ் மற்றும் செல்ஃபிகளுக்காக 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. கூடுதலாக, போனில் உள்ள பிரத்யேக AI Button மூலம் தேவையான முக்கிய டூல்களை நொடிப் பொழுதில் அணுகலாம். AI Image to Video 2.0 போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் இதில் உண்டு.
35
2.5 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் தாங்கும்!
உண்மையைச் சொல்லப் போனால், போனின் டிசைன்தான் இதன் முதல் பிளஸ் பாயிண்ட். வெறும் மெலிதான கண்ணாடி உடலமைப்புடன் வரும் போன்களுக்கு மத்தியில், கடுமையான பயன்பாட்டைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆய்வகப் பரிசோதனைகளில் சுமார் 2.5 மீ.உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் தப்பக்கூடிய வலிமையுடன், நசுங்குதலைத் தாங்கும் SGS Premium Performance சான்றிதழையும் இது பெற்றுள்ளது. அத்துடன், தூசி மற்றும் தண்ணீருக்கு எதிராக இதுவரை நாம் பிரீமியம் போன்களில் மட்டுமே பார்த்த IP68, IP69 மற்றும் கடுமையான வெப்ப/அழுத்த நீரையும் தாங்கும் IP69K ரேட்டிங்குகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.
6.87 அங்குல TFT LCD டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1020 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1,592 x 720 பிக்சல் தெளிவுத்திறன் கொண்டது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 685 சிப்செட் மற்றும் அட்ரினோ 610 கிராபிக்ஸ் மூலம் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட 'MagicOS 10' இயங்குதளம் இதில் உள்ளது. 6GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 'RAM Turbo' தொழில்நுட்பம் மூலம் விர்ச்சுவல் ரேமைப் பயன்படுத்தி மெமரி அனுபவத்தை மேலும் அதிகரிக்க முடியும். இது 4G ஸ்மார்ட்போனாகும். இதனுடன் டூயல் நானோ சிம், NFC, Wi-Fi 5 மற்றும் Bluetooth 4.2 அம்சங்கள் தரப்பட்டுள்ளன.
55
விலை என்ன? எங்கு கிடைக்கிறது?
சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange), டெசர்ட்கோல்ட் (Desert Gold) மற்றும் வெல்வெட் பிளாக் (Velvet Black) என 3 கண்ணைக் கவரும் நிறங்களில் வெளியாகி இருக்கும் இந்த போன், முதற்கட்டமாக அஜர்பைஜான் (Azerbaijan) நாட்டின் ஹானர் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அங்குள்ள சந்தைகளில் இதன் 6GB + 256GB மாடல் தோராயமாக AZN 688 முதல் AZN 820 வரை (400 டாலர் டூ 480 டாலர் வரை / இந்திய மதிப்பில் சுமார் ரூ.33,000 முதல் ரூ.40,000 வரை) விற்பனை செய்யப்படுகிறது. முரட்டுத்தனமான பேட்டரியும், உடையாத உறுதியும் எதிர்பார்ப்பவர்களுக்கு இதுவொரு சிறந்த ரக்கட் சாய்ஸ் என்பதில் சந்தேகமில்லை!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.