பாலக்கோட்டில் கஞ்சா போதையில் இருந்த நான்கு இளைஞர்கள், லாரி டிரைவரை தாக்கி, பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மைதீன் நகரை சேர்ந்த அமின் (21), கம்மாளர் தெருவை சேர்ந்த முகம்மது ஆவேஷ் (19), பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த ஆசிப் (22), அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (21) ஆகிய நான்கு இளைஞர்களும் நண்பர்கள். இவர்கள் அதிகளவில் கஞ்சாவை பயன்படுத்தியதால் போதை தலைக்கேறி அட்டூழியம் செய்துள்ளனர்.
24
லாரி டிரைவர் மீது தாக்குதல்
அதன் பின்னர் பாலக்கோடு அருகே உள்ள கர்த்தாரஅள்ளி சுங்கச் சாவடியில், ஓசூரில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற சரக்கு லாரியின் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர். இதனைத் தடுத்து கேட்ட பார்கூரையை சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் (27) என்பவரை கத்தி மற்றும் இரும்பு ராடால் குத்தி கடுமையாக தாக்கியுள்ளனர்.
34
போதையில் ரவுடித்தனம்
பின்னர் பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு சென்ற இளைஞர்கள் அங்கிருந்த பொதுமக்களை விரட்டிக் கத்தியை காட்டி மிரட்டியதுடன், ஆட்டோ டிரைவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், நான்கு பொதுமக்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகவலறிந்த டி.எஸ்.பி. ராஜசுந்தர் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, கஞ்சா போதையில் ரவுடித்தனத்தில் ஈடுபட்ட மூன்று பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
ஆசிப் என்பவர் தலைமறைவாகி உள்ளான். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதாகிய மூவரும் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.