
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், இப்போது அரசியல் களத்திலும் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இளைய தளபதியாக தொடங்கிய விஜய் 'தளபதி'யாக வளர்ந்து இன்று ஒரு கட்சியின் தலைவராக மாறியுள்ளார். விஜய்யின் இந்தப் பயணம், திரைப்படங்களில் தொடங்கி தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியிருக்கிறது. 1984ஆம் ஆண்டு 'வெற்றி' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், 1992இல் 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 1990களில் 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை' போன்ற காதல் படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார்.
கில்லி, திருப்பாச்சி, தலைவா, கத்தி, மெர்சல், சர்கார் போன்ற படங்கள் விஜய்யை வணிக ரீதியாக வெற்றிகரமான நடிகராக உயர்த்தியது. நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் பல வெற்றிகரமாக இருந்தாலும், சில படங்கள் அரசியல், சமூக விவாதங்கள் அல்லது பிற காரணங்களால் சர்ச்சைகளைச் சந்தித்து சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. 2013ஆம் ஆண்டு வெளியான தலைவா என்ற படத்தில் முதல் முறையாக சிக்கலை சந்தித்தார் விஜய், இப்படத்தில் ‘டைம் டு லீட்’ என்ற வாசகம் அரசியல் ரீதியாக உணரப்பட்டதையடுத்து ஒரு சில அரசியல் கட்சிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், படத்தின் வெளியீடு தாமதமானது, திரையரங்குகளுக்கு மிரட்டல்கள் வந்தன. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சித்தும் படக்குழுவுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ‘டைம் டு லீட்’ வாசகம் நீக்கப்பட்ட பிறகே படம் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது.
அடுத்தாக கத்தி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்ததால், இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், படத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. 2015ஆம் ஆண்டு வெளியான புலி திரைப்படத்தில் மறைமுகமாக அரசியல் தலைவர் ஒருவரை வீழ்த்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாக விமர்சிக்கப்பட்டது. மேலும் அப்போது வருமான வரித்துறை சோதனையால் படத்தின் வெளியீடும் தடைபட்டது. 2017ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி (GST) மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்கள் அரசியல் விமர்சனங்களாகக் கருதப்பட்டு, பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பைப் பெற்றன.
சர்கார் படத்தில் அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் வசனங்கள் மற்றும் இலவச திட்டங்கள் குறித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. விஜய்யின் வெளியீட்டு விழா உரையும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் கதநாயகியின் பெயரும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு, மறு-தணிக்கைக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இது போன்ற பல அரசியல் குறியீடுகள் விஜய்யின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியது.
அந்த வகையில் எப்போது அரசியலுக்கு வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு 2024ஆம் ஆண்டு இனிப்பான செய்தியை சொன்னார் விஜய், அந்த வகையில் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என பெயரை பதிவு செய்த விஜய், தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். அதே நேரம் ஜனநாயகன் திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் எனவும் அறிவித்தார். அடுத்தாக விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்திய விஜய், தவெகவில் அரசியல் நிலைப்பாடு, கூட்டணி, கொள்கைகளை அறிவித்தார். அடுத்தாக படப்பிடிப்பில் தீவிரமாக களந்து கொண்ட விஜய், ஒரு சில நிகழ்வுகளில் மட்டுமே வெளியே வந்தார்.
அந்த வகையில் பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள பகுதிக்கு நேரடியாக சென்ற விஜய் அப்பகுதி மக்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அடுத்தாக அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்தார். கோவையில் நடைபெற்ற தவெகவினர் கூட்டத்திற்கு சென்ற விஜய் ரோட் ஷோ நடத்தி அனைவரின் பார்வையும் திருப்பினார். இதே போல மதுரையிலும் பட சூட்டிங் செல்லும் வழியில் ரோட் ஷோ நடத்தி ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்தித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இன்னும் முழு நேர அரசியிலில் விஜய் ஈடுபடாமல் பார்ட் டைம் அரசியல் செய்வதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது இடத்திற்கே சென்று பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களை தங்களது பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து உதவிகள் செய்தது விமர்சிக்கப்பட்டது. தற்போது ஜனநாயகன் திரைப்பட சூட்டிங் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் தமிழகம் முழுவதும் அரசியல் பயணம் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து வரும் விஜய் புது திட்டங்களோடு களத்தில் இறங்கவுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று நிர்வாகிகளோடு கள நிலை தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை நேரடியாக சந்திக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், திமுகவிற்கு மிகப்பெரிய அளவில் டப் கொடுக்க பிரசாந்த் கிஷோர் தலைமையிலான அணியினர் திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம் தங்கள் அணியில் தவெகவை இணைக்க அதிமுக காய் நகர்த்தியது. ஆனால் விஜய்யின் தொகுதி, கூட்டணி ஆட்சி போன்ற நிபந்தனையால் அதிமுக பின்வாங்கியுள்ளது. மேலும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை பொறுத்தவரை தவெக எந்த அணியிலும் சேராமல் தனியாக போட்டியிட திட்டமிட்டுள்ளது. அப்போது தான் தங்களது செல்வாக்கை கணிக்க முடியும் என முடிவெடுத்துள்ளது.
எனவே 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் அதிமுக போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் ஒரு சில கட்சிகளை மட்டும் தங்கள் அணிக்கு இழுக்க காய் நகர்த்தி வருவதாகவும், அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளை இழுக்க பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. எனவே தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் ரகசிய பேச்சுவார்த்தை வெளிப்படையாக தொடங்கும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள்.