Senthil Balaji sudden visit to Delhi :போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் கடந்த 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சுமார் ஓராண்டுக்கு பிறகே சிறையில் இருந்து வெளியில் வந்தார். வந்த உடன் மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்ற நிலையில் மீண்டும் அவருக்கு செக் வைக்க களம் இறங்கியுள்ளது அமலாக்கத்துறை. அதன் படி செந்தில் பாலாஜி துறையின் கீழ் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது.
செக் வைத்த செந்தில் பாலாஜி
இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆணவங்கள் கைப்பற்றப்பட்டதாகவும். போக்குவரத்து ஒப்பந்தம், பார் ஒப்பந்தம் உள்ளிட்ட பல வகைகளிலும் மோசடி கண்டறியப்பட்டதாகவும், இதன் மூலம் 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரிவந்துள்ளதாக கூறியது.
இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் சீறியது. உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியது. இந்த நிலையில் பாஜக சார்பாக டாஸ்மாக் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்பட்டது.
'முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்படுவார்'
இந்த போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை. எச் ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது போல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் திமுக தரப்பில் கூறும் போது, எதையும் சந்திக்க தயார் எனவும். மத்திய அரசு தங்களை எதிர்க்கும் மாநிலங்களில் அமலாக்கத்துறை மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டது. இந்த பரபரப்பான நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை டெல்லி சென்று இன்று காலை மீண்டும் திரும்பியுள்ளார்.
செந்தில் பாலாஜி டெல்லி பயணம்
இடைப்பட்ட 12 மணி நேரத்தில் டெல்லியில் நடைபெற்றது என்ன என பல வித யூகங்கள் கிளம்பியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பில் இருப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், சட்ட வல்லுநர்களோடு முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக செந்தில் பாலாஜி டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக கைது நடவடிகைகளில் இறங்கவுள்ளது. எனவே இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று மாலை 6 மணியில் இருந்து இன்று காலை 6 மணி வரை சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.