என்னவாகும் அண்ணாமலையின் நிலை.! தமிழக பாஜகவில் ரகசியமாக நடப்பது என்ன.? வெளியாகும் ஷாக் தகவல்

First Published Sep 4, 2024, 2:58 PM IST

தமிழக பாஜகவில் அண்ணாமலையின் எதிர்காலம் குறித்தும், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகமும் பாஜகவும்

தமிழகத்தில் திமுக- அதிமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகிறது. ஒருமுறை திமுக வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகள் கழித்து அதிமுக வெற்றி பெறும்.  இந்தநிலையில் 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக தென் மாநிலங்களில் மீது தனது கவனத்தை திருப்பியது.

முதலில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த பாஜக அடுத்து கேரளா மற்றும் தமிழகத்தின் மீது பார்வை திரும்பியது. தமிழக பாஜக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றாக காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த தமிழிசையை தமிழக தலைவராக நியமிக்கப்பட்டார்.  தமிழிசை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதை தமிழக மக்களை வெகுவாக கவர்ந்தது.
 

தமிழிசையின் செயல்பாடு

மக்களோடு மக்களாக இணைந்து கட்சி பணியை சிறப்பாக செயல்படுத்தினார். தமிழகம் முழுவதும் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். பட்டி தொட்டி எங்கும் பாஜகவின் கொடி பறக்க தொடங்கியது. தாமரை மலரந்தே தீரும் என்ற தமிழிசையின் முழக்கம் வெகுவாக  மக்களிடம் சென்றடைந்தது. இதனையடுத்து சுமார் 5 ஆண்டுகள் தமிழக தலைவராக இருந்த தமிழிசை 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில் அவரை கைவிடாத பாஜக தேசிய தலைமை தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்தது. இது மட்டுமில்லாமல் புதுச்சேரியையும் கூடுதல் பொறுப்பு வழங்கியது.

Latest Videos


எல்.முருகனின் வேல் யாத்திரை

இதனால் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவியை மீனவரணியில் இருந்த எல்.முருகனை நியமித்தது. இவரும் தமிழக பாஜகவிற்காக பல போராட்டங்களையும் மேற்கொண்டார். வேல் யாத்திரையையும் பாஜக தமிழகம் முழுவதும் நடத்தியது. இந்தநிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 2021ஆம் ஆண்டு தேர்தலில் 4 இடங்களை கைப்பற்றியது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்கள். இதற்கு பரிசு வழங்கும் வகையில் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை பாஜக வழங்கியது. 

அண்ணாமலையில் அதிரடி அரசியல்

இந்தநிலையில் தான் பிரதமர் மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. மற்ற பாஜக தலைவர்களை விட புதிய கோணத்தில் செயல்பட்டார் அண்ணாமலை, திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அதிரடி அரசியலை கையில் எடுத்தார். போட்டிக்கு போட்டி அறிக்கை, போராட்டம் என இறங்கி விளையாடினார்.

தமிழகத்தில் எதிர்கட்சி அதிமுகவா அல்லது பாஜகவா என்ற கேள்வி எழுந்தது. இதன் காரணமாக அதிமுக- பாஜக இடையே மோதல் தொடங்கியது. நாட்கள் செல்ல, செல்ல 2026ஆம் ஆண்டு பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணாமலை பேசியது அதிமுக தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

அண்ணாமலையும் அதிமுகவும்

இதனையடுத்து திமுகவிற்கு டப் கொடுக்க அண்ணாமலை அவ்வப்போது ஆடியோக்களை வெளியிட்டார். அடுத்ததாக தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடை பயணத்தையும் தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்திக்க பாஜக தேசிய மேலிடம் திட்டமிட்ட நிலையில் அண்ணாமலையின் பேச்சால் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து தேசிய தலைமை அதிமுகவுடன் பல முறை சமாதான பேச்சு நடத்தியது. அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி என்ற முடிவு எடுத்தது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை பாஜக காத்திருந்தது. ஆனால் அதிமுக தலைமை பிடிகொடுக்காமல் இருந்தது. இதனையடுத்து இரண்டு தரப்பும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தது. இதனால் இரண்டு கட்சிகளும் திமுகவிடம் படு தோல்வி அடைந்தது. பல தொகுதிகளில் டெபாசிட்டும் இழந்தது. 

கூட்டணியை முறித்த அண்ணாமலை

இந்த தோல்வியால் விரக்தி அடைந்த அண்ணாமலை அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஒருமையில் அண்ணாமலை பேசினார். இதனை பாஜகவில் உள்ள மற்ற மூத்த தலைவர்களே ரசிக்கவில்லை. ஏற்கனவே அண்ணாமலை மீது அதிருப்தியில் இருந்த பாஜகவின் தலைவர்கள் மேலும் கோபம் அடைந்தனர்.

இந்த சூழ்நிலையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பான படிப்பு படிக்க கடந்த வாரம் புறப்பட்டு சென்றார் அண்ணாமலை. இதன் காரணமாக தமிழகத்தில் மாநில தலைவர் இல்லாத நிலை உருவானது. புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. 

Annamalai

லண்டன் சென்ற அண்ணாமலை-  எச் ராஜாவுக்கு பொறுப்பு

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை தமிழக பாஜகவிற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டு அவரது கீழ் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  எச்.ராஜாவிற்கு பல ஆண்டு காலமாக முக்கிய பொறுப்புகள் கொடுக்காமல் ஒதுக்கி வைக்கப்பட்டநிலையில்  தற்போது பொறுப்பு வழங்க காரணம் ஆர்எஸ்எஸ் அழுத்தம் என கூறப்படுகிறது.

தற்போது அண்ணாமலை இல்லாத தமிழக பாஜகவில் எச்.ராஜா தினந்தோறும் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அண்ணாமலையால் பாதிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ள தலைவர்கள எச்.ராஜாவை சந்தித்து பேசியுள்ளார். 

அண்ணாமலை மாற்றப்படுவாரா.?

இதனையடுத்து தான் எச்.ராஜா டெல்லி சென்று அமித்ஷாவைத்து சந்தித்து தமிழக பாஜகவின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஆலோசித்துள்ளார். கடந்த வாரம் லண்டன் சென்ற அண்ணாமலை அரசியல் தொடர்பாக எந்த பதிவும் தற்போது வரை வெளியிடவில்லை. கட்சியின் உறுப்பினராக புதுப்பித்த தகவலை மட்டுமே வெளியிட்டார். 

இந்தநிலையில் அரசியலை படித்து கற்ற வேண்டிய தேவையில்லை அது அனுபவமாக வர வேண்டியது என தெரிவிக்கும் பாஜகவினர் அண்ணாமலையின் நிலை தொடர்பாக இன்னும் 3 வார காலத்தில் புதிய தகவல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அடித்து கூறுகின்றனர். எனவே தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த மாதம் இறுதியில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும்  கூறுகின்றனர்.

குட்புக்கில் அண்ணாமலை

அண்ணாமலை லண்டனில் இருந்து தமிழகம் திரும்பியதும் மத்திய அமைச்சரவை அல்லது வேறு ஏதேனும் பொறுப்பு கொடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மற்றோரு தரப்போ அண்ணாமலை மீது பாஜக தலைமை அதிகப்படியான நம்பிக்கை வைத்துள்ளதாகவும், குறிப்பாக மோடி மற்றும் அமித்ஷாவின் குட் புக்கில் இவர் இடம்பெற்றுள்ளதால் தலைமை மாற்றத்திற்கான வாய்ப்பு இல்லையென கூறுகின்றனர். 

click me!