தமிழ்நாடு பாஜகவில் விஜயதாரணிக்கு மீண்டும் எந்தவொரு பதவியும் வழங்கப்படாததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் உலா வருகின்றன.
தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சசிகலா புஷ்பா, ராமலிங்கம், கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், கோபால்சாமி, சுந்தர் ஆகியோரும் தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
24
தமிழக பாஜகவில் புதிய பொறுப்புகள்
மேலும் கராத்தே தியாகராஜன், அஸ்வத்தமன், வினோஜ் பி செல்வம், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் மாநில செயலாளர்களாகவும், பால கணபதி, இராம சீனிவாசன் உள்பட 5 பேர் மாநில பொதுச்செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர மாநில பொருளாளர், மாநில அலுவல செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்படி ஏராளமானோர் தமிழ்நாடு பாஜகவில் புதிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயதாரணிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
34
விஜயதாரணிக்கு மீண்டும் ஏமாற்றம்
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவான விஜயதாரணி, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறி அவர் பாஜகவில் இணைந்தார். ஆனால் கட்சியில் சேர்ந்தது முதல் விஜயதாரணிக்கு எந்தவித பொறுப்பும், பதவியும் வழங்காமல் அவருக்கு ஏமாற்றத்தை பரிசளிப்பதையே பாஜக வழக்கமாக வைத்துள்ளது.
அண்ணாமலையை நம்பி வந்தவர்
2024 நாடாளுமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட அவருக்கு பாஜக சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன்பிறகு ஏதாவது ஒரு பொறுப்பு தனக்கு கிடைக்கும் என காத்திருந்த விஜயதாரணிக்கு இப்போதும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தான் பதவிக்காகவே பாஜகவுக்கு வந்துள்ளதாவும், தனக்கு ஒரு பதவி வேண்டும் எனவும் விஜயதாரணி தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பொது மேடையில் நேரடியாக கோரிக்கை வைத்தார். ஆனால் அண்ணாமலை பதவியில் இருந்து நீக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
நயினார் நாகேந்திரன் வந்த பிறகும் அவரிடம் தனக்கு பொறுப்பு வழங்கும்படி விஜயதாரணி கேட்டு வந்தார். நயினார் பதவியேற்றவுடன் தனக்கு விரைவில் பதவி கிடைக்கும் எனவும் விஜயதாரணி அடிக்கடி பேட்டியில் சொல்லி வந்தார். இப்படி தொடர்ந்து கேட்டும் விஜயதாரணியை கைகழுவிய பாஜக, அவருக்கு பதவி வழங்க மறுத்துள்ளது. இது விஜயதாரணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
ஆகையால் அவர் விரைவில் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த நடிகர் சரத்குமாருக்கும் எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.