கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசும்போது தவெக தலைவர் விஜய் கதறி அழுத தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று விஜய் அவர்களிடம் தெரிவித்துள்ளார்
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சம்பவம் நடந்தவுடன் உடனடியாக சென்னை சென்ற விஜய், 3 நாட்களுக்கு பிறகு கரூர் சம்பவம் குறித்து வீடியோவில் பேசினார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை ஏன் நேரில் பார்க்க வரவில்லை? என விமர்சனம் எழுந்த நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களிடம் வீடியோ கால் மூலம் பேசி விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
24
பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ காலில் பேசிய விஜய்
விஜய் தங்களிடம் வீடியோ கால் மூலம் பேசியது குறித்து பலியானவர்களின் குடும்பத்தினர் அதனை ஊடகங்களிடம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் சம்பவத்தில் இறந்தவரின் மனைவி சங்கவி, ''என்றும் உங்களுக்கு ஆறுதலாக இருப்பேன் என்று விஜய் தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்குகள் முடிந்தவுடன் அனுமதி கிடைத்ததும் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்'' என்றார்.
34
பெண்ணிடம் கதறி அழுத விஜய்
இதேபோல் ஒரு பெண்ணிடம் விஜய் பேசியது, அவரது குழந்தை காது கேளாதது மற்றும் வாய் பேசாதது என்று அறிந்ததும் விஜய் வீடியோ காலிலேயே கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், ''பாப்பாவுக்கு வாய் பேச முடியாது. காது கேட்காது என்று நான் சொல்லும்போதே அவர் (விஜய்) அழுது விட்டார். இப்படி நடந்து விட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் அவர் அழுது விட்டார். ஏன் சார் எங்களை பார்க்க வரவில்லை? என்று கேட்டபோது கூடிய சீக்கிரம் உங்களை வந்து சந்திக்கிறேன். உங்களுக்கு என்றும் துணையாக நிற்போம்'' என்றார்.
நான் சொன்னனே கேட்டீங்களா?
தொடர்ந்து பேசிய அந்த பெண், ''நான் கூட்ட நெரிசலில் குழந்தைகளை தூக்கிட்டு வராதீங்கன்னு சொன்னேன். நீங்க எங்கம்மா அதை கேட்டீங்க என்று விஜய் என்னிடம் சொன்னார். அப்போது நான், 'இப்படி நடக்கும் என்று யாருக்கு சார் தெரியும். எப்படி சார் உங்களை பார்க்காமல் இருக்க முடியும். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் உங்களை பிடிக்கும்' என்று சொன்னேன்'' என்று தெரிவித்தார்.
விஜய் பாதிக்கப்படவர்களின் குடும்பத்தினரிடம் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக தனித்தனியாக வீடியோ காலில் பேசியுள்ளார். என்ன ஆறுதல் சொன்னாலும் இழந்த உயிர்களை மீட்டு கொண்டு வர முடியாது என்று கூறி பலரிடம் அழுதுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிர்களை பறிகொடுத்த குடும்பத்தினர் யாரும் விஜய்யை குறை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.