Dmk alliance parties : தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணியாக பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டணியானது தொடர்கிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளது.
இந்த கூட்டணியானது இரண்டு நாடாளுமன்ற தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றியை பெற்றுள்ளது.
உடையுமா திமுக கூட்டணி.?
இந்த நிலையில் திமுக ஆட்சியின் பதவி காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இதே கட்சிகள் நிலைக்குமா.? அல்லது பல்டி அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அந்த வகையில் திமுக கூட்டணியானது உடைந்து தங்கள் அணிக்கு வரும் என அதிமுகவும், நடிகர் விஜய்யின் தவெகவும் காத்துள்ளது.
அந்த வகையில் விரைவில் திமுக கூட்டணி உடையும் என தவெக மாநில நிர்வாக ஆதவ் அர்ஜூனா வெளிப்படையாகவே பேசினார். அதற்கு ஏற்றார் போல தற்போது திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் கூட்டணி மாறும் மனநிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வேல்முருகன் அதிருப்தி
அதில் முதலாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சண்முகம் திமுக ஆட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அடுத்ததாக கூட்டணி ஆட்சி என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தமிழக அரசோடு நேரடியாகவே மோதியுள்ளார். அதன் படி கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தவர் தற்போது தமிழக சட்டசபையில் வேல்முருகனின் செயல்பாடு முதலமைச்சரை அதிருப்தி அடைய செய்துள்ளது.
அதிகபிரசங்கித்தனமாக வேல்முருகன்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்து சபாநாயகர் அப்பாவு இருக்கைக்கு முன்பாக வேல்முருகன் முழக்கம் எழுப்பினார். திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி அரசுக்கு எதிராகவே இப்படி செயல்படுவதை முதலமைச்சர் ஸ்டாலின் ரசிக்கவில்லை. தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம். அதற்காக சபாநாயகர் இருக்கையை முற்றுகையிடுவது எப்படி என திமுகவினர் கூறினார்.
இதனையடுத்து தான் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்ளும் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார். இதன் காரணமாக வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கையை மட்டும் சபாநாயகர் அப்பாவு விடுத்திருந்தார்.
வேல்முருகனுக்கு எச்சரிக்கை
எனவே திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொடருமா.? கூட்டணியில் இருந்து வெளியேறுமா என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இதற்கு வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார். அதன் படி, நான் சட்டசபையில் எடுத்து முன்வைக்கின்ற, தமிழர் உரிமை, தமிழ் மண் சார்ந்த கோரிக்கை குறித்து, திமுக தலைமைக்கு சங்கடம் ஏற்பட்டு இருந்தால் திமுக தலைமை என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம் என கூறி உள்ளேன்.
திமுக கூட்டணியில் தொடர்கிறதா.?
இருந்த போதும் தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில் தான் உள்ளதாக தெரிவித்தார். எனவே சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பாக அப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்து, கட்சி நிர்வாகிகளுடன் கூடி பேசி முடிவு எடுக்கப்படும் என வேல்முருகன் தெரிவித்தார்.