BJP Annamalai questions : தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்திடவும், ஐந்தாம் வகுப்பு வரை, தமிழ் மொழியினைக் கட்டாயமாக்கிட வலியுறுத்தியும், தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்தும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
சில நாடுகள் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள், சிலர் அரவணைக்கிறார்கள், சிலர் எதிர்க்கிறார்கள், இத்தகைய சிறப்பு தலைவர் மோடியே ஆவார். சுதந்திர இந்தியாவில், இதுவரை இரண்டு முறை, புதிய கல்விக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
மூன்றாவது மொழி கட்டாயமாக இந்தி
காலத்துக்கேற்ப கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி இஸ்ரோவின் தலைவராக இருந்த கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைத்த குழு உருவாக்கியதே, தற்போது கொண்டு வரவுள்ள புதிய கல்விக் கொள்கை. இதன் முக்கியமான அம்சம், ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தாய்மொழிக் கல்வி. மூன்றாவது மொழியாக, மாணவர்களுக்கு விருப்பமான ஒரு இந்திய மொழி. ஆனால், திமுக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழி கட்டாயமாக இந்தி மொழியாக இருந்தது.
எந்த தகுதியும் இல்லாத அமைச்சர்கள்
தமிழக அமைச்சர்களாக இருப்பவர்கள் பின்னணியைப் பார்த்தால் ஒருவர் கூட, எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்தான். இவர்கள் அனைவரும், நமது குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்க, மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை, அரசுப் பள்ளிகளில் இலவசமாகக் கிடைப்பதைத் தடுக்கிறார்கள். சாராயம் விற்றவர்கள், ரவுடிகளாக இருந்தவர்கள் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் கல்வி கொள்கை பற்றி பேச என்ன தகுதி உள்ளது. திமுக கூட்டத்தில் ஆபாச பேச்சு மட்டும் தான் உள்ளது.
ஆபாசமாக பேசும் திமுகவினர்
2026 ஆண்டு 200 தொகுதி வெற்றி பெறுவோம் என்று மாய கனவு காண்கிறார்கள். தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் மக்களை ஆபாசமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் திமுக தலைவர்கள். அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். ஆனால், திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் வருமானம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது திமுக அரசு.
வேலையில்லாத முதல்வர்கள் கூட்டம்
சென்னையில் இந்தி கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து திமுக ஒரு கூட்டம் நடத்தியது. தமிழகத்தைக் குப்பைக் கிடங்காக மாற்றும் கேரள மாநில முதலமைச்சர், தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் துணை முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தொகுதி மறு சீரமைப்பு பற்றி புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். முட்டாள்களாக இருக்கிறார்கள் திமுகவினர். வேலையில்லாத முதல்வர்கள் ஒன்று இணைந்து கூட்டம் போட்டுள்ளனர்.
திமுகவினரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லனும்
விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என்று, நமது பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் உறுதியளித்த பிறகும், தனது அரசியல் லாபத்துக்காகத் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழக மக்களுக்கு எதிரான இந்த திமுக ஆட்சி வரும் தேர்தலில் நிச்சயம் அகற்றப்படும். 200 தொகுதி வெற்றி பெறுவோம் என கனவு காண்கிறார்கள். அனைவரையும் மருத்துவ மனைக்கு தான் அழைத்து செல்ல வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.