கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் மற்றும் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸ் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
23
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கைது
இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக மதியழகன் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. மேலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
33
கரூர் நகர பொறுப்பாளர் கைது
இந்நிலையில் தவெகவை சேர்ந்த மற்றொரு நிர்வாகியை போலீஸ் கைது செய்துள்ளது. பிரசாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர் பவுன்ராஜ் என தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கரூர் நகர காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.