TVK Lawyer Shocking: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது திட்டமிட்ட சதி என குற்றம்சாட்டி, சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையில் அதிகமாக கூட்டங்கள் கூடியதால் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்சாரத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக, சிபிஐ விசாரணை கோரி தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
24
செந்தில் பாலாஜிக்கு தொடர்பு
அந்த மனுவில் கூட்ட நெரிசல் ஒரு சாதாரண விபத்து அல்ல, இது திட்டமிட்ட சதிச்செயல். குறிப்பாக, ஆளும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு இச்சம்பவத்தில் நேரடித் தொடர்பு உள்ளது, விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும். விஜய் இதற்கு முன் நடத்திய அனைத்து கூட்டங்களும் அமைதியான முறையில் நடந்த நிலையில், கரூரில் மட்டும் இது போன்ற ஒரு சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது, இதில் ஏதோ பின்னணி சதித்திட்டம் அடங்கி இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை உரிய அளவில் பாதுகாப்பு வழங்கத் தவறியது, கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரம் தடைபெற்றது, மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தடியடி நடத்தப்பட்டது உள்ளிட்ட மனித தவறுகளும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
34
ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றி கழகம் நடத்திய பிரச்சாரத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க, தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி வழங்க வேண்டும். அதற்கு காவல் துறை எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மதுரையில் தவெக வழக்கறிஞர் அறிவழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய் என கூறியுள்ளார்.