கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் முதல் முறையாக மாமல்லபுரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இன்றைய கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிருத்தி தமிழக வெற்றி கழகத்தை விஜய் தொடங்கினார். விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டைத் தொடர்ந்து சனிக்கிழமைகள் தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டார். திருச்சி, அரியலூர், திருவாரூர், நாமக்கல் என பல மாவட்டங்களில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். மேலும் அவருக்கு பொதுமக்கள் வழங்கிய வரவேற்பும் பிற அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
24
கரூர் சம்பவத்தால் முடங்கிய தவெக
விஜய்யின் அரசியல் பயணம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்திற்கு பின்னர் தவெக.வின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கிப்போனது.
34
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய்
கட்சியின் பொதுச் செயலாளர், இணை பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தலைமறைவான நிலையில், தலைவர் விஜய் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தார். ஒரு மாத காலமாக வீட்டை விட்டே வெளியே வராத விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டினார். அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் கட்சி சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வரவு வைக்கப்பட்டது. அதன் பின்னர் கரூரில் இருந்து மாமல்லபுரம் அழைத்துவரப்பட்ட குடும்ப உறுப்பினர்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாமல்லபுரத்தில் தவெக.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கரூர் சம்பவத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அழைப்பு கடிதம், அடையாள அட்டை இருந்தால் மட்மே நிர்வாகிகள் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.