ஈரோட்டில் அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தவெகவினர் போஸ்டர்கள் வைத்துள்ளனர். இதனால் அதிமுக, தவெக கூட்டணி பேச்சு மேலும் நெருக்கம் அடைந்துள்ளது.
கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் ஒருபக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மறுபக்கம் தமிழக அரசியல் கணக்குகளையும் முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது. கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜியின் சதியும், காவல்துறையினர் அலட்சியமே காரணம் என தவெகவும், விஜய் தாமதமாக வந்ததே சம்பவத்துக்கு காரணம். காவல்துறையினரின் சொல்லை தவெக நிர்வாகிகள் கேட்கவே இல்லை என திமுக அரசும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.
25
தவெகவினர் மனதில் இடம்பிடித்த இபிஎஸ்
இந்த விவகாரத்தில் நாம் தமிழர் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் விஜய்க்கு எதிராக நிற்கும் நிலையில், பாஜகவும், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக உள்ளன. திமுக கூட்டணி கட்சியின் தலைவர்கள் விஜய் மீது குற்றம் சொல்ல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தை கையாண்ட விதம் தவெகவினர் மனதில் இடம்பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
விஜய்க்கு துணையாக நின்ற இபிஎஸ்
கரூர் விவகாரத்தில் விஜய் மீது விமர்சனம் வைப்பதை முற்றிலுமாக தவிர்த்த இபிஎஸ், திமுக அரசின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொனனார். கரூர் நிகழ்வுக்கு முன்பாக அதிமுகவை விஜய் மறைமுகமாக கடுமையாக பேசி இருந்தார். ஆனால் அதை மனதில் வைக்காமல் விஜய்க்கு இபிஎஸ் துணையாக நின்றதை தவெகவினர் எதிர்பார்க்கவில்லை.
35
விஜய் பக்கம் நெருங்கிய பாஜக
இதனால் அரசியல் காட்சிகள் மாறிய நிலையில், விஜய் பக்கம் பாஜகவும் நெருங்கியது. தங்களுக்கு ஆதரவாக நின்ற அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர வேண்டும் என தவெகவினர் சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இதற்கு அச்சாரம் போடும் விதமாக தவெகவுடன் கூட்டணி என்பதை இபிஎஸ்ஸும் மறைமுகமாக உணர்த்தி இருந்தார்.
தவெக அதிமுக கூட்டணி?
அதிமுக பிரசார கூட்டத்தில் தவெக கொடி பறந்த நிலையில், 'வலிமையான கூட்டணி அமைய உள்ளது. பிள்ளையார் சுழி போட்டாச்சு' என தவெக கொடியை பார்த்து இபிஎஸ் சொன்ன விஷயம் தான் இப்போது ஹாட் டாபிக் ஆக உள்ளது. அதே வேளையில் இபிஎஸ்ஸின் சிக்னலை விஜய் ஏற்றுக் கொள்வரா? பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய விஜய் அவர்களுடன் சேருவாரா? என்ற மில்லியன் டாலர் கேள்வியும் உள்ளது.
எது எப்படி இருந்தாலும் விஜய்க்கு ஆதரவாக நின்ற இபிஎஸ்க்கு தவெகவினர் மத்தியில் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர் பேசும் இடங்களில் எல்லாம் தவெகவினர் கொடிகளுடன் வந்து விடுகின்றனர்.
ஈரோடு மொடக்குறிச்சியில் இபிஎஸ் இன்று உரையாற்றிய நிலையில், மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர்கள் வைத்துள்ளது பேசும்பொருளாகியுள்ளது.
இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்து போஸ்டர்
''எங்களுடைய கஷ்டமான காலத்தில் எங்களுக்கு தோள் கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி. நாங்கள் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்'' என்று மொடக்குறிச்சி தொகுதி தவெக நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் வைத்துள்ளனர்.
55
விஜய்யின் முடிவு என்ன?
இதேபோல் ஈரோடு மொடக்குறிச்சியில் எடப்பாடி இன்று பேசும்போதும் தவெக கொடிகளுடன் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். தவெக தொண்டர்கள் அதிமுக கூட்டணியை விரும்பும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் முடிவு என்ன? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.