கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை தீவிரம் காட்டி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரைத் தொடர்ந்து அமமுக வெளியேறுவதாக அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்டு கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு ஷாக் கொடுத்தனர். கூட்டணியில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டினார்.
25
மோடியை பிரதமராக்கவே கூட்டணியில் இணைந்தோம்
அவரைத் தெடார்ந்து வெளியேறிய டிடிவி தினகரன், நாங்கள் மோடியை பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கூட்டணிக்குள் வந்தோம். எங்களை கூட்டணிக்குள் கொண்டு வந்தவர் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். ஆனால் தற்போதை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கட்சிகளை சரியாக வழிநடத்தவில்லை. கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
35
தேனி தொகுதியை விட்டுக்கொடுத்தவர் பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வத்திற்காக நீங்கள் ஏன் பேசுகிறீர்கள் என நயினார் நாகேந்திரன் கேட்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனக்காக அவரது சொந்த தொகுதியான தேனி மாவட்டத்தை விட்டுக் கொடுத்தவர் பன்னீர் செல்வம். அப்படிப்பட்டவருக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நயினார் நாகேந்திரனும், அண்ணாமலையும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பதில் அளித்துள்ள டிடிவி தினகரன், “எனக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் மீதும் கோபம் கிடையாது. நயினார் நாகேந்திரன், அண்ணாலை என இருவருமே எனது நண்பர்கள் தான். என் செல்போன் நம்பர் நயினார் நாகேந்திரனிடம் உள்ளது. அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
55
துரோகம் இழைத்தவரை எப்படி முதல்வராக ஏற்க முடியும்..?
எங்களுக்கு துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரிடம் இருந்து கட்சியை மீட்கவே நாங்கள் கட்சி தொடங்கினோம். அப்படிப்பட்ட நிலையில் அவரை எப்படி நாங்கள் முதல்வராக ஏற்க முடியும்? எங்களுக்கு அவரைத் தவிர வேறு யார் மீதும் கோபம் இல்லை. முதல்வர் வேட்பாளரை மாற்றும் பட்சத்தில் நாங்கள் மீண்டும் கூட்டணிக்கு வரத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.