Directorate of Government Examinations: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் ஒளி நகலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வை சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 20ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்வர்கள் விடைத்தாள் ஒளி நகல் கோருதல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றிற்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையில் விடைத்தாள் நகல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 52,236 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 74,862 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
25
விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யும் முறை
விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகலினை பாட வாரியாக பல்வேறு கட்டங்களாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்று முதல் தமிழ், கணிதம், விருப்பமொழிப்பாடம் ஆகிய பாடங்களின் விடைத்தாள் ஒளிநகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்த பின்னர் தேர்வர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் படிவத்தையும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஜூன் 17 முதல் 23க்குள் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை பணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் மற்றும் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டண தொகையை பணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மறுமதிப்பீடு செய்ய பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505ம், மறு கூட்டலுக்குப் பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.205ம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 9498383075 / 9498383076 என்ற செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.