Bike Taxi
அதிகரிக்கும் பைக் டாக்ஸி
நவீன காலத்திற்கு ஏற்ப போக்குவரத்து வசதியும் மாறி வருகிறது. முன்பு பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து மட்டுமே இருந்த நிலையில் வாடகை ஆட்டோ, வாடகை கார் என மாறியது. தற்போது வாடகை பைக் டாக்ஸியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பைக் டாக்ஸிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆட்டோவில் செல்ல குறிப்பிட்ட தூரத்திற்கு பலநூறுக்களில் பணம் வசூல் செய்யும் நிலையில் 100 ரூபாய்க்குள்ளாகவே உரிய இடத்திற்கு செல்லும் நிலை பைக் டாக்ஸியால் ஏற்பட்டுள்ளது.
rapido bike
ஆட்டோ ஓட்டுநர்கள்- பைக் டாக்ஸி மோதல்
மேலும் ஒரு நபர் மட்டும் வெளி இடங்களுக்கு செல்ல பைக் டாக்ஸி உதவியாக உள்ளது. இதனால் பெண்களும் பைக் டாக்ஸி புக் செய்து பயணம் செய்கின்றனர். இதனிடையே பைக் டாக்ஸிக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பைக் டாக்ஸியால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். பல இடங்களில் பைக் டாக்ஸி ஓட்டுபவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் அடிக்கும் நிலை உள்ளது. இந்தநிலையில் பைக் டாக்ஸியை தடை விதிக்க வேண்டும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.
auto driver
வணிக பயன்பாட்டில் இரு சக்கர வாகனம்
வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மோட்டார் வாகன விதிகளை மீறி இருசக்கர வாகனங்கள் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் அனுப்பிவைத்துள்ளார்.
rapido bike taxi
தணிக்கை மேற்கொள்ள உத்தரவு
அதன் படி மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பான அறிக்கையை மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அனுப்பவும் போக்குவரத்து துறை ஆணையர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.