உயரும் வெங்காயம், தக்காளி விலை
காய்கறிகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்ட சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது உயரத்தொடங்கியுள்ளது. சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயமாகும். அந்த வகையில் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது.
இதன் காரணமாக காரீப் பருவ வெங்காய உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு வெங்காய விநியோகம் தடைபட்டுள்ளது. மேலும் நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக்கில் பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.
வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு சில்லரை விற்பனையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மும்பையில் வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதே போல நாடுமுழுவதும் வெங்காயத்தை சில்லரை விற்பனையை செயல்படுத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் லாரிகளின் மூலம் மக்கள் கூடும் பகுதியில் விற்பனை செய்ய உள்ளது.
இதனிடையே நாசிக்கில் வெங்காய வரத்து குறைவாக உள்ளதால், கோயம்பேடு சந்தைக்கும் வெங்காயத்தின் வரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ ரூ.45 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை 50 முதல் 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் குறைவான அளவே வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.
இல்லத்தரசிகள் அவதி
தக்காளி விலை உயர்வால் வீடுகளில் தக்காளி சட்னி உள்ளிட்ட முக்கிய உணவு வகைகளை தயாரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதே ஓட்டல்களிலும் குறைவான அளவஏ வெங்காயம் மற்றும் தக்காளிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என இல்லத்தரசிகள் புலம்பி வருகின்றனர். இதனிடையே சமையலுக்கு அத்தியாவசிய தேவையான தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தவும், குறைவான விலையில் கூட்டுறவு மற்றும் நியாயவிலைக்கடைகளி்ல் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறத்தியுள்ளனர்.
இதனையடுத்து தமிழக அரசும் வெங்காயத்தின் விலையை குறைவான விலையில் விற்பனை செய்ய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்திருப்பது தொடர்பாக வியாபிரிகள் கூறுகையில், வெங்காய வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறினார்.
காய்கறிகள் விலை என்ன.?
இதனிடையே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம் விலை என்ன.?
பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காலிஃப்ளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.