தமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்குப் பிறகு வெயில் மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று மற்றும் நாளை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக வெயில் மீண்டும் சுட்டெரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
24
லேசானது முதல் மிதமான மழை
அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் ஜூன் 05 முதல் 09ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
34
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மேலும் அதே இரண்டு நாட்கள் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.