
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடா காட்சி அளித்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேறொடு சாய்ந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமல்ல பகல் நேரங்களில் வௌியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகினறனர்.
இந்நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் மழை இருக்கா என்பது குறித்து சென்னை வானிலை மையம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு – தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று முதல் ஜூன் 24 வரை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கொங்கன், கோவா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்மென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று 13 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதாவது அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், மதுரை மாநகரம், ஈரோடு ஆகிய இடங்களில் தலா 103 டிகிரி, கடலூர், திருச்சி, திருத்தணி, தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டையில் தலா 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், தஞ்சாவூரில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது.
சென்னையில் பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவில் குரோம்பேட்டை, மீனம்பாக்கம், மேடவாக்கம், வண்டலூர், ஓ.எம்.ஆர் சாலை, சோழிங்கநல்லூர், தாம்பரம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் குளிர்ச்சியா சூழல் நிலவி வருகிறது.