
தமிழகத்தில் ஆசிரியர்களின் பணிகள் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், ஆளுமை வளர்ச்சி மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்துவதை மையமாகக் கொண்டதாக உள்ளது. மேலும் ஆசிரியர்கள் தான் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய வழிகாட்டியாக உள்ளனர். மெதுவாக கற்பவர்கள் (slow learners) மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் வகுப்புகள், விளக்கங்கள், மற்றும் தனிப்பட்ட கவனம் செலுத்துவதிலும் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பயண விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு மற்றும் சம்பாதித்த விடுப்பு போன்றவை வழங்கப்படுகின்றன.
பெண் ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்கள் வரை அனுமதிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுய் பெற்றவர்களில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லையெனவும் அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதற்கு தணிக்கைத் துறையின் தடைகள் காரணமாக திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்திய நிலையில் ஆசியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் விடுவிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், அலுவலகங்கள், பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் , தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பணிக்காலத்திற்கு அகத்தணிக்கை உடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோரின் பணிக்காலத்திற்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி, அலுவலகம் சார்ந்த தணிக்கை தடைகளுக்காக ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தல் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கை பெற்ற நிலையில், ஓய்வுப் பெற்ற, ஓய்வு பெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் மீது தணிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கைத் தடை நிலுவை ஏதுமில்லை என்ற நிலையில், ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களும் பெற்று வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் சார்ந்த பள்ளி அலுவலகங்களில் அலுவலர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் எழுப்பப்பட்டுள்ள இதா (நிதி சாராத) தணிக்கைத் தடைகள் காரணமாக சார்ந்த அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைத்தல் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் சார்ந்த பள்ளி அலுவலகத்தில் பணம் பெற்று வழங்கும் அலுவலராக பணிபுரிந்த காலத்தில், அவ்வலுவலகம் பள்ளியின் கட்டுப்பாட்டின் கீழ் பணிப்புரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீது எழுப்பப்பட்டுள்ள நிதி சார்ந்த தணிக்கைத் தடைகள் ஏதேனும் இருப்பின், அதன் மீதும், கீழ்க்கண்ட நடைமுறைகளை உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்திய பின், தவறாது 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி சார்ந்த தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் வேறு பள்ளிக்கு மாறுதலில் சென்றிருப்பின், தற்போது பணிபுரியும் பள்ளியில் பணிப்பதிவேட்டில் பதிவு மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும். எனவே அகத்தணிக்கைத் தடை சார்ந்த நிகழ்வுகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஓய்வு பெற்ற அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களும் பெற்று வழங்க அறிவுறுத்தப்படுவதாக அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.