
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
1. கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 இலட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 இலட்சம் வீடுகள் கட்டப்படும்.
2. கிராமப்புறப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குகின்ற ஊரகச்சாலைகளை மேம்படுத்துகிற ‘முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 8 ஆயிரத்து 911 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 ஆயிரத்து 484 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக, ஆயிரத்து 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.
3. ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும்‘சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே 33 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1 இலட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கான விழா வரும் 4-02-2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
4. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும்.
* மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
* இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள்.
5. அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
அவர்களுடைய அடுத்த முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புறேன். அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.