தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அவர் பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.
24
பிரதமர் மோடியை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்
அப்போது முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கான நிதி உரிமைகள் குறித்து பேச இருக்கிறார். மேலும் நிதி ஆயோக் கூட்டம் முடிந்தபிறகு பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பிரதமரை சந்திக்க மாலை 4.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் நிதி உரிமை
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை விடுவிக்காத நிலையில் அதுகுறித்தும், தமிழ்நாட்டின் பல்வேறு நிதி உரிமைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் நடந்த ஊழல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த வழக்கில் இருந்து மகனை காப்பாற்றுவதற்கே ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
34
சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்த ஸ்டாலின்
முன்னதாக, நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் அவர்களது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, புதுதில்லி, சாணக்யபுரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினர் இல்லம் மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டு, புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி டாக்டர் பரமேஸ்வரனுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். விரைவில் முழுமையாக குணமடைய அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.