அதிமுக, பாஜக 13 தொகுதிகளை பெற்றிருக்கும்
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்திருந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் இந்த அளவுக்கு வெற்றி கிடைத்து இருக்காது. கணிசமான இடங்களை அதிமுக, பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் 41% வாக்குகளை கைப்பற்றி இருக்கும். இது திமுக கூட்டணியை ஒப்பிடும்போது 7% தான் குறைவாகும். அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் திமுக கூட்டணியின் வெற்றி 26 இடங்களாக குறைந்திருக்கும். அதே வேளையில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து 13 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
திமுகவை விட அதிமுகவே ஆதிக்கம்
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆளும்கட்சி அந்தஸ்தை இழந்திருந்தாலும், கடும் எதிர்ப்பலைக்கு மத்தியிலும் தனியாக 33.3% வாக்குகளை பெற்றிருக்கிறது. இது திமுகவின் 37.87% வாக்குகளை விட கொஞ்சம் தான் குறைவு. இதேபோல் 2001 தேர்தலில் 31.4% வாக்குகள், 2006ல் 32.6%, 2011ல் 38.4%, 2016ல் 40.9% என திமுகவை விட அதிமுகவின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை என்பதே தெரியவருகிறது.