திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 1.30 லட்சம் தொண்டர்கள் பங்கேற்ற நிலையில் மாநாடு மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் என்னைப் பற்றி கூறும்போது, ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று கூறுவார். நானும் உதயநிதியிடம் அதே உழைப்பை பார்க்கிறேன்.
கொள்கை எதிரிகள் உதயநிதியை மிகவும் ஆபத்தானவர் என்று சொல்கிறார்கள். அவர் கொள்கையில் மிகவும் உறுதியாக இருக்கிறார். இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவர் இறங்கி அடிக்கிறார். உதயநிதியின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.
24
மக்களிடம் பொய்யையும், அவதூறையும் பரப்பும் வலதுசாரிகள்
ஒன்றியத்தில் பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கக்கூடிய ஆணவத்தில் வலதுசாரிகளும், பிற்போக்கு சிந்தனைவாதிகளும் முன் எப்போதும் இல்லாத அளவில் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படத் தொடங்கி இருக்கின்றனர். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக்கூடிய மக்களிடம் பொய்களையும், அவதூறுகளையும், பிற்போக்கு சிந்தனைகளையும் தேன் தடவிய வார்த்தைகளால் கொண்டுசேர்க்க முயற்சிக்கின்றனர்.
34
வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்
நாம் நமது அன்பையும், உணர்வுகளையும் பரிமாறிக்கொள்வதற்காக பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப் வைத்திருப்போம். ஆனால் அதில் ஒருவர் மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விஷம் தேய்ந்த கருத்துகளை பகிருவார். அதனை பலரும் ஏதோ படிக்காமல் அனுப்பியிருப்பார் என்று நினைத்து கடந்து போயிவிடுவோம். ஆனால் அதனை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு அவரும் அதே போன்ற கருத்துகளை பகிர்வார். அப்படிப்பட்டவரின் பிற்போக்கு கருத்துகள் தொற்று நோய் போல் வேகமாக பரவும்.
அதனை தடுக்க வேண்டும் என்றால் அதற்கு மாற்று மருந்தான நம்முடைய கொள்கைகளையும் நாம் தீவிரமாக பரப்ப வேண்டும்.
பொய்யை பேச ஒருவர் தயங்காத போது, உண்மையைப் பேச நெஞ்சில் உரமிருக்க நாம் ஏன் தயங்க வேண்டும்? எதற்காக நான் இதை தயங்குகிறேன் என்றால் இப்போது நமது தோள்களில் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் காப்பாற்றுகின்ற கடமை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டையும், நாட்டின் பன்முகத் தன்மையையும் காக்கின்ற கடமை நமக்கு உள்ளது.
இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராக கொள்கை ரீதியாக சண்டையிடுகின்ற ஒரே மாநில கட்சி நம்முடைய திமுக தான். அவர்களால் வெற்றிகொள்ள முடியாதது நம்முடைய தமிழ்நாட்டை மட்டும் தான்” என்று தெரிவித்தார்.