திருச்செந்தூர் சூரசம்ஹாரம் விழாவையொட்டி தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் கோயில் உலகப்புகழ் பெற்றதாகும். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக வங்கக்கடல் ஓரம் அமைந்துள்ள கோயிலுக்கு தமிழகம மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை புரிகின்றனர். இங்கு நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். வரும் அக்டோபர் 27 ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
24
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
இதைக்காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சூரசம்ஹாரத்தை காணும் வகையில் சென்னை, கோவை, பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
34
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அதன்படி அக்டோபர் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு மற்றும் திருச்செந்தூரில் இருந்து அக். 27ம் தேதி அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு மேற்கூறிய இடங்களில் இருந்து திருச்செந்தூர் வருவோருக்கும், திருச்செந்தூரில் இருந்து மேற்கூறிய இடங்களுக்குச் செல்ல www.tnstc.in இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்யலாம். TNSTC அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.