2 நாட்களில் எடப்பாடி பழனிசாமியின் 2 நிகழ்ச்சிகளை முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் புறக்கணித்துள்ளதால் அதிமுகவில் விரிசல் அதிகமாகியுள்ளது.
அதிமுகவில் முற்றும் மோதல்; ஈபிஎஸ்ஸின் 2 நிகழ்ச்சிகளை புறக்கணித்த செங்கோட்டையன்!
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கி வரும் அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி பூசல் இப்போது அரசியல் களத்தில் பேசும்பொருளாகி இருக்கிறது. கோவையில் அத்திக் கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவை அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் புறக்கணித்தார். எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியின் காரணமாகவே அவர் விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. ''எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியின் மேடையிலும், அந்த விழாவுக்கான அழைப்பிதழிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை'' என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
24
செங்கோட்டையன்
மேலும், ''பாராட்டு விழாவை புறக்கணித்தேன் என்பதை விட, என் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்கூட்டியே எனக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தால் அவர்களிடம் இது குறித்து கலந்து பேசியிருப்பேன்'' என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ''இது விவசாயிகள் நடத்தும் பாரட்டு விழா. அரசியல் நிகழ்ச்சி இல்லை. ஆகையால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படவில்லை'' என்று தெரிவித்துள்ளனர்.
அதிமுகவின் இருபெரும் தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்படாததால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற மற்றொரு நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்துள்ளது அதிமுகவில் விரிசல் உருவாகியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை நிலைய அலுவலகத்தில் இருந்தபடி, காணொளி வாயிலாக எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.இந்த விழாவில் அதிமுக மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற நிலையில், செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
அதிமுக நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையன் பரிந்துரைந்த நபர்களை எடப்பாடி பழனிசாமி புறம்தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியில் தனக்கு செல்வாக்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட செங்கோட்டையன் அந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவே கடந்த 2 நாட்களில் எடப்பாடி பழனிசாமியின் 2 நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
44
சசிகலா
செங்கோட்டையன் விழாவை புறக்கணித்தாலும் எடப்பாடி பழனிசாமி மீது இதுவரை நேரடியாக விமர்சனம் வைக்கவில்லை. இதேபோல் செங்கோட்டையன் விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ஜெயக்குமார் தவிர வேறு யாரும் பேசவில்லை. ஆகவே இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும் என சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில் செங்கோட்டையன் அதிமுகவில் பெரிய அதிகாரப் பதவியை எதிர்பார்க்கிறார். இதற்கு பின்னால் இருப்பது முழுக்க முழுக்க சசிகலா தான் என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.