நடிகர் விஜய், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மக்களை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலடியாக அமைச்சர் சேகர்பாபு, விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் எனக் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய், தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்க தேதி குறித்துள்ளார். அடுத்ததாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தமிழக முதலமைச்சருக்கு உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த அக்கறை இருக்கிறது எனில், பரந்தூர் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களைக் கண்துடைப்புக்காக அதிகாரிகளையோ அல்லது அமைச்சர்களையோ வைத்துச் சந்திக்கச் செய்யாமல், 'தாங்களே நேரில்' சந்தித்து, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அவர்களுக்கு உடனடியாகத் தாங்கள் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
24
தலைமை செயலகத்திற்கு வருவேன்- விஜய்
பரந்தூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படும் பட்சத்தில், எம் மக்களுக்காகக் களத்தில் நிற்க வேண்டியது தமிழக வெற்றிக் கழகத்தின் கடமை என்பதால், நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக்கொண்டு வந்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, அவர்கள் சார்பாக முறையிடும் சூழல் உருவாகும் என விஜய் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் பரந்தூர் பகுதி மக்களின் நலனுக்காக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய சூழலும் எழும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக விஜய் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் கடவுள் முருகனுக்கு திமுக ஆட்சியில் தொண்டு செய்தது போல் வேறு எந்த ஆட்சியிலும் செய்யப்பட்டதில்லை என தெரிவித்தார்.
34
திருச்செந்தூர் குடமுழுக்கு
முருகன் கோயில்களுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றுத் தரக்கூடிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என கூறிய அவர் வரும் 14 ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது என தெரிவித்தார். திருச்செந்தூர் கோவில் குடமுழுக்குகாக மூன்று இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர் வசதி மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் லட்சக்கணக்கான உணவுப் பொட்டலங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது என சேகர்பாபு கூறினார்.
நாளை மதியம் 12 மணியோடு திருச்செந்தூர் கோவில் நடை சாத்தப்படும் அதன் பிறகு குடமுழுக்கு நடந்த பிறகு பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும் 25 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடு மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் இல்லையைன்றால் தலைமைச்செயலகம் நோக்கி வருவேன் என்று தவெக தலைவர் விஜய் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலில் அவர் மக்களை நோக்கி பயணம் செல்லட்டும், அவரது பயணமே செப்டம்பர் மாதம் என்கிறார், நேற்று காத்திருந்த கட்சி தொண்டர்களை கூட சந்திக்கவில்லை, முதலில் தன்னையும், தான் சார்ந்துள்ள இயக்கத்தை பார்க்க வேண்டும், மக்களை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் உள்ளார்.
யாருக்கும் பாதிப்பு இல்லாமல் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகளை தமிழக முதலமைச்சர் மேற்கொள்வார் என்றார். பரந்தூர் விமானநிலைய விவகாரத்தில் தலைமைச்செயலகம் வருவேன் என அறையில் இருந்து அறை கூவல் விடுக்கும் தவெக தலைவர் விஜயை left handல் தமிழக முதலமைச்சர் deal செய்வார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.