இதற்கிடையே விஜயலட்சுமியிடம் தொடர்பில் இருந்ததை ஒத்துக் கொண்ட சீமான், திமுகவின் தூண்டுதலின் பேரில் விஜயலட்சுமி இப்படி நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியிருந்தார்.
கடந்த 12ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சீமான் பொதுவெளியில் விஜயலட்சுமி குறித்து பேசியதற்காக செப்டம்பர் 24ம் தேதிக்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று கூறியிருந்தனர்.
மன்னிப்பு கேட்க மறுத்த சீமான்
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில், 'நீதிபதிகள் உத்தரவிட்டும் சீமான் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை' என்று கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ''இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த விவகாரத்தை எத்தனை நாள் தான் இழுத்துக் கொண்டு செல்வது. அப்படி இருவரும் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு வர வைக்க வேண்டியது இருக்கும்''என்று தெரிவித்தனர்.