பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடைபெற்று வரும் உட்கட்சி மோதலையடுத்து செயற்குழு கூட்டத்தில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கவும், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ராமதாஸுக்கு அதிகாரம்
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு அடுத்தபடியாக செல்வாக்கு உள்ள கட்சியாக பாமக உள்ளது. வட மாவட்டங்களில் குறிப்பிட தகுந்த வாக்குகளை பாமக கொண்டுள்ளது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் வட மாவட்டங்களில் வெற்றி பெற பாமகவின் வாக்குகள் பெரும் பங்கு வகிக்கும்.
அந்த வகையில் திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் அணியில் பாமக இருக்கவே விரும்புவார்கள். ஆனால் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனுமான அன்புமணி ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் உட்கட்சி மோதலால் பாமக இரண்டாக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
26
ராமதாஸ்- அன்புமணி மோதல்
கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞர் அணி தலைவராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாத என வெளிப்படையாகவே அறிவித்தார்.
இதனால் மேடையிலேயே அன்புமணி- ராமதாஸ் இடையே மோதல் வலுத்தது. அப்போது ராமதாஸ், "நான் உருவாக்கிய கட்சி, எனது முடிவை ஏற்காதவர் வெளியேறலாம்" என்று கூற, அன்புமணி பனையூரில் தனி அலுவலகம் திறந்து செயல்படுவதாக அறிவித்து ஷாக் கொடுத்தார். பொது வெளியில் இருவரும் மோதிக்கொண்டது கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
36
அன்புமணியை விமர்சித்த ராமதாஸ்
இதனையடுத்து அன்புமணிக்கு வழங்கப்பட்ட தலைவர் பதவியை பறிப்பதாகவும், தான் இனி பாமக தலைவராக செயல்படுவதாகவும் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். ஒரு கட்டத்தில் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என் முதல் தவறு. மேடை நாகரிகமின்றி செயல்படுகிறார். தாயை தாக்க முயன்றவர் என ராமதாஸ் பகீர் தகவலை தெரிவித்தார்.
அடுத்ததாக நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி தன்னை மிரட்டியதாகவும், "இல்லையெனில் எனக்கு கொள்ளி வைக்க வேண்டியிருக்கும் என அன்புமணி கூறியதாகவும் ராமதாஸ் பரபரப்பு புகார் தெரிவித்தார். ஆனால் இந்த புகாரை மறுத்த அன்புமணி, ராமதாஸ் அனைத்தையும் மறந்து விட்டார் குழந்தையாக மாறிவிட்டார் என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் பாமகவின் அடுத்தக்கட்ட முடிவு தொடர்பாக இன்று ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கவும் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என் வலியை தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். கூட்டணி அமைப்பது குறித்து ஏற்கனவே நிர்வாக குழு அளித்துள்ளது.. இப்போது செயற்குழுவும் அதிகாரம் அளித்துள்ளது.
56
வேட்பாளர் தேர்வு தொடங்கப்போகிறேன்
எனவே வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை நான் தொடங்கியுள்ளேன். ஆகவே தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்ய தயாராக இருங்கள். தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஏ பார்ம், பி பார்ம் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரம் எனக்கு மட்டும் தான் உள்ளது. எனவே உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் அனைத்தும் போய்விடும் என நம்புகிறேன்.
எங்கே செல்வது என காத்திருந்தவர்களுக்கு இப்போது சந்தேகம் தீர்ந்திருக்கும் என ராமதாஸ் தெரிவித்தார். முன்னதாக இந்த கூட்டத்தில் ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மூத்த மகள் காந்திமதியும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
66
யார் இந்த காந்திமதி.?
இதுவரை பாமக கூட்டங்களில் பெரிய அளவில் கலந்து கொள்ளாதவர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணிக்கு போட்டியாக தனது மூத்த மகள் காந்திமதியை அரசியல் வாரிசாக ராமதாஸ் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே யார் இந்த காந்திமதி என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி ஆவார்.
காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமன், பாமக இளைஞரணி தலைவராக 2024 டிசம்பரில் நியமிக்கப்பட்டார், ஆனால் அப்போதே முகுந்தன் நியமனத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து தான் இருதரப்பிற்கும் இடையே மோதல் வெளியே தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.