Published : Sep 24, 2024, 07:44 AM ISTUpdated : Sep 25, 2024, 10:28 AM IST
Government School Holiday: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் வழங்க வேண்டும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே வாரத்தில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்க திட்டமிட்டு அட்டவணை தயார் செய்யப்பட்டது. அதாவது செப்டம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கடைசி தேர்வு முடிந்து சனிக்கிழமை முதல் காலாண்டு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 5 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.
25
Quarterly Exam Holiday
அதன்படி, செப்டம்பர் 28 சனிக்கிழமை, 29 ஞாயிறு, செப்டம்பர் 30 திங்கள், அக்டோபர் 1 செவ்வாய், அக்டோபர் 2 புதன் ஆகியவையாகும். இதில் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்து விடுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. அப்படி பார்த்தால் காலாண்டு தேர்வு விடுமுறை 2 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை 9 நாட்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கையில்: தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், காலாண்டுத் தேர்வுக்குப் பிறகு வழங்கப்படும் விடுமுறையானது, முந்தைய ஆண்டுகளில் 9 நாள்கள் விடப்பட்டன. ஆனால் நடப்பாண்டில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாள்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், வழக்கம்போல சனி, ஞாயிறு விடுமுறை நாளாகும். அதன்பிறகு, அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகும். அவ்வாறு பார்க்கும்போது, இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.
எனவே, அக்டோபர் 4, 5 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டித்தால் போதும் சனி, ஞாயிறுடன் சேர்த்து 9 நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறையாக மாணவர்களுக்கு கிடைக்கும். மேலும், காலாண்டுத் தேர்வுக்குப் பின் அளிக்கப்படக் கூடிய விடுமுறையில் தான் மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டியுள்ளது. அவற்றை சரிபார்த்து எமிஸ் இணையத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அலுவலக வேலைகளும் எஞ்சியிருக்கின்றன.
விடுமுறை முடிவதற்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து தேர்ச்சி சதவீத தகவலைக் கேட்டு அதிகாரிகள் நெருக்கடி அளிப்பர். எனவே, பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆண்டுகளைப் போல, மாணவர்களுக்கான விடுமுறையை 9 நாள்கள் என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை எந்த மாதிரியான முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்களும் இருந்து வருகின்றனர்.