
பெண்களுக்காக தமிழக அரசின் திட்டங்கள்
தமிழக அரசின் சார்பாக பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக மகளிர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக திட்டங்கள் தீட்டப்படுகிறது. குறிப்பாக யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த காலில் நிற்பதற்காகவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது இந்த திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்தால் அத்தியாவசிய தேவைக்கு யாருடைய எதிர்பார்ப்பில்லாம் தங்களுக்கு தேவையானது வாங்கிக்கொள்ள உதவியாக உள்ளது. அடுத்ததாக விடியல் திட்டம் இந்த திட்டத்தின் மூலம் வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
சமூகநலத்துறை திட்டங்கள
இதன் காரணமாக மாதம் சிறிய தொகை ஊதியமாக பெறும் பெண்களுக்கு பேருந்து கட்டணமே பெரும் சுமையாக இருந்த நிலையில் இலவச பேருந்து பயணத்தால் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை சேமிக்க முடிகிறது. இதுபோன்று கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் வகையில் 18ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. கருவுற்ற பெண்கள் அரசு மருத்துவமனையில் பரிசோதனையை தொடங்குவது முதல் குழந்தைக்கு தடுப்பூசி போடும் வரை ஒவ்வொரு காலத்திற்கும் உதவிடும் வகையில் 18ஆயிரம் ரூபாய் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் பரிசு பெட்டகமும், ஊட்டச்சத்து பெட்டகமும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தநிலையில் ஏழை எளிய மக்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது பெரிதும் சிரமப்படும் நிலையில் அவர்களுக்கு உதவிட திருமண உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருமண உதவித்தொகை திட்டம்
அந்த வகையில் தமிழக அரசு சார்பாக 4வகையான திருண உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 25ஆயிரம் ரூபாய் மற்றும் 50ஆயிரம் ரூபாய் என இரண்டு முறையில் வழங்கப்படுகிறது. அதன்படி படிக்காத பெண்களுக்கு 25ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50ஆயிரம் ரூபாயும் 8கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பெற்றோர்களை இழந்த பெண்களுக்கு உதவிடும் வகையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு வருமான உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. பயனாளிகளுக்கு 25,000 ரூபாயும் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 50,000 ரூபாயும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
தாலிக்கு தங்கம் திட்டம்
அடுத்தாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டத்தில் மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 25ஆயிரம் ரூபாய் நிதியுதவில், 15,000 ரூபாய் மின்னணு மூலமாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதில் ரூ.30,000 மின்னணு மூலமாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்பு மற்றும் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
நிபந்தனைகள் என்ன.?
இதே போல டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் 8 கிராம் தங்க நாணயத்துடன் 25ஆயிரம் மற்றும் 50ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அடுத்ததாக ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் 25ஆயிரம் மற்றும் 50ஆயிரம் ரூபாயோடு சேர்த்து 8கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் ஏராளமான மக்கள் பதிவு செய்து காத்துள்ளனர்.
16 கிலோ தங்கம்
இதில்பெரும்பாலானவர்களுக்கு தங்கமானது வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்ந நிலையில் திருமண உதவித் திட்டங்களுக்கு 48.83 கோடி ரூபாய் செலவில் 16 கிலோ தங்கம் கொள்முதல் செய்ய சமூக நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் 8 கிராம் எடையுள்ள 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதன்படி இந்த திட்டங்களின் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தங்கத்தை கொள்முதல் செய்யும் பணியை சமூக நலத்துறை தொடங்கியுள்ளது. இதன்படி, மொத்தம், ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கம் கொள்முதல் செய்ய சமூக நலத்துறை நடவடிக்கை டெண்டர் கோரியுள்ளது.
வீடு தேடி வருகிறது தங்கம்
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தங்க நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் இணையதளம் மூலமாக டெண்டர் ஆவணங்களை அக்டோபர் 22ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருமண உதவி தொகை திட்டத்திற்காக நீண்ட காலமாக காத்திருப்பவர்களுக்கு விரைவில் தங்கம் வழங்கபடவுள்ளது.