தமிழகத்தில் மீண்டும் மழை? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

First Published | Sep 23, 2024, 2:40 PM IST

தமிழகத்தில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைந்து, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெயில் டூ மழை

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் அடிக்கும் வெயிலுக்கு டப் கொடுக்க செப்டம்பர் மாதத்தில் வெயில் வாட்டி வதைத்தது. வீடுகளில் இருந்து வெளியே வரவே மக்கள் அச்சப்பட்டனர். சுமார் 22ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதனிடையே தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் எப்படி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்,  மத்திய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், மத்தியமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்னலோடு மழை

இன்று மற்றும் நாளை (23.09.2024 - 24.09.2024) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல வருகிற 29ஆம் தேதிவரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

Tap to resize

rain

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

23.09.2024 முதல் 27.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

24.09.2024: தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

25.09.2024:தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26.09.2024; தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!