Coimbatore: கோவை விமான நிலையம் அருகே மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூவரையும் காவல் துறையினர் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை விமான நிலையம் அருகே ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் தனது நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு மதுபோதையில் வந்த மூவர் அவர்கள் இருவரையும் காரில் இருந்து இறங்குமாறு வற்புறுத்தி உள்ளனர். இருவரும் மறுப்பு தெரிவிக்கவே தங்கள் கைகளில் இருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி காரின் கண்ணாடியை உடைத்து இருவரையும் வெளியே இழுத்துள்ளனர்.
24
பாதிக்கப்பட்டவர்களை மீட்ட போலீஸ்
பின்னர் ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி அங்கிருந்து விரட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
34
7 தனிப்படைகள் அமைப்பு
தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கோவை துடியலூர் அருகே குற்றவாளிகள் மூவரும் தங்கியிருப்பதை காவல் துறையினர் கண்டு பிடித்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது அவர்கள் அரிவாளால் தாக்கியதில் தலைமைக் காவலர் சந்திரசேகர் காயம் அடைந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் குற்றவாளிகள் சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன், குணா (எ) தவசி ஆகிய மூவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூவருக்கும் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை கைது செய்த காவல் துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.