
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், “இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கடந்த 2&ஆம் நாள் தன்னிச்சையாக பிறப்பித்த செயல்முறை ஆணையின் அடிப்படையில் சக்கரமல்லூர் கிராமத்தில் இராட்சத எந்திரங்களைக் கொண்டு பாலாற்றில் மணல் அள்ளும் பணியை அதிகாரிகள் நேற்று தொடங்கியுள்ளனர். இதையறிந்தவுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், மக்களும் திரண்டு சென்று எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மணல் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எந்த நிமிடம் வேண்டுமானாலும் மணல் குவாரி மீண்டும் தொடங்கக்கூடும். சக்கரமல்லூரில் மணல் குவாரி தொடங்கப்பட்டிருப்பது இயற்கையின் மீதான கொடும் தாக்குதல் ஆகும்.
புதிய மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் ஏற்கனவே 2011&ஆம் ஆண்டில் மணல் குவாரி அமைக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டது. அப்போது 40 அடி ஆழத்திற்கும் மேலாக மணல் அள்ளப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலந்திருக்கிறது. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக மணல் குவாரி மூடப்பட்டாலும் கூட, அதன் பாதிப்புகள் இன்று வரை தொடர்கின்றன. நிலத்தடி நீரில் கழிவுநீர் ஊடுருவியது இன்னும் சரியாகவில்லை. அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட பள்ளம் இன்னும் தூரவில்லை. அந்த பள்ளத்தில் தேங்கி நின்ற நீரில் விழுந்து இதுவரை 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதனால் ஏற்பட்ட சோகமும், இழப்பும் இன்னும் தீராத நிலையில் இப்போது புதிய மணல் குவாரி திறக்கப்பட்டிருப்பது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓர் இடத்தில் மணல் குவாரி தொடங்க அனுமதி அளிக்கும் போது, அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு ஆராய வேண்டும். ஆனால், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பொய்யான தகவல்களை தெரிவித்து மணல் குவாரிக்கு அனுமதி அளித்திருக்கிறார். மணல் குவாரி அமைக்கப்படும் இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தக் கட்டமைப்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த செயல் ஆணையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மணல் குவாரியிலிருந்து சரியாக 300 மீட்டர் தொலைவில் ஆண்டுதோறும் விழா எடுக்கப்படும் சிவன் கோயிலும், குடியிருப்புகளும் உள்ளன. மணல் குவாரிக்கு மிக அருகிலுள்ள ஆற்றுப் படுகையின் வழியாக உயரழுத்த மின்பாதை செல்கிறது. ஆற்றின் கரைகளில், சுடுகாடு, கல்லறை, குடிநீர் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக பாலாற்றில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியிருந்து 500 மீட்டர் தொலைவில் தான் பழைய குவாரியால் ஏற்பட்ட பள்ளம் உள்ளது. புதிய குவாரியில் மணல் எடுக்கப்பட்டால், அதனால் ஏற்படும் பள்ளம் அடுத்த சில மாதங்களில் பழைய குவாரி பள்ளத்துடன் இணைந்து விடும். அதனால், இயற்கைக்கும், சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் எந்தக் காலத்திலும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
இராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூரில் பாலாறு உள்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்கள், கடலூர் மாவட்டத்தில் 2 இடங்கள், தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஓர் இடம் என 8 மணல் குவாரிகளை கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. அவற்றை திறக்கக்கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 28&ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன் பின்னர் மணல் அள்ளுவதற்கான ஒப்பந்தத்தை யாருக்கு வழங்குவது என்பதில் அதிகார மையத்தில் இருக்கும் சக்திகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படாததால், அறிவித்தவாறு மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை. இதே காரணத்தால் தேர்தல் வரை மணல் குவாரிகள் திறக்கப்படுவதை திமுக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் பாலாற்றில் புதிய மணல் குவாரி அமைப்பதற்கான ஆணையை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கடந்த 2&ஆம் தேதி செயல்முறை ஆணை பிறப்பித்து அடுத்த பத்தாம் நாளில் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மணல் குவாரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த மணல் குவாரிகளும் திறக்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் 25 மணல் குவாரிகளைத் திறந்தது. அந்த குவாரிகளில் 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய ஆய்வில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு அதிகமாக 27.70 லட்சம் அலகுகள் மணல் அள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மூடப்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டவையாகவே இருக்க வேண்டும். அவற்றை ஒருபோதும் மீண்டும் திறக்கக் கூடாது.
தேர்தல் வரை மணல் குவாரிகளை திறப்பதில்லை என்று கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முடிவெடுத்திருந்த நிலையில், அதற்கு அடுத்த நாளே புதிய மணல் குவாரியை திறக்க ஆட்சியாளர்கள் அனுமதி அளிக்கிறார்கள் என்றால், ஆட்சிக்காலத்தின் கடைசி நிமிடம் வரை இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து, கோடிகளை குவிக்க வேண்டும் என்ற பேராசை தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் திறக்கப்பட்டுள்ள மணல் குவாரியை திமுக அரசு உடனடியாக மூட வேண்டும். மீதமுள்ள மணல் குவாரிகளையும் திறக்கும் முடிவை கைவிட வேண்டும். அதையும் மீறி மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், அந்தப் பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைத் திரட்டி வரலாறு காணாத போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.