கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு 18,000 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை விடுவித்தார்.
கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக பிரதமர் மோடி ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் சாமிநாதன் வரவேற்றனர். மேலும் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
24
இயற்கை வேளாண் மாநாடு
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் இயற்கை வேளாண் மாநாடு நடக்கும் கொடிசியா மைதானத்துக்கு கார் மூலம் சென்றார். அவருக்கு வழிநெடுக பாஜகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின்பு கொடிசியாவில் விவசாயிகளின் இயற்கை வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்குள்ள இடம்பெற்றுள்ள பொருட்கள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
34
9 கோடி விவசாயிகளுக்கு 18,000 கோடி ரூபாய்
இதன்பிறகு இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு 18,000 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.
பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கும் தலா ரூ.2,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக கிரெடிட் ஆகி விடும். இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 21.80 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 முறை தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.